திருவள்ளூர் அருகே வாகன சோதனையில் ரூ.1¼ லட்சம் பறிமுதல்
திருவள்ளூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பா.பொன்னையா தலைமையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.;
திருவள்ளூர்,
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதியன்று நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து உள்ளது. இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பா.பொன்னையா தலைமையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் ஒண்டிக்குப்பம் பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும்படை அதிகாரி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உதயசங்கர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் டேனியேல்சுரேஷ் மற்றும் துணை ராணுவத்தினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதித்தபோது, அந்த காரில் இருந்த ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 500-ஐ பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காரில் இருந்த சென்னை அண்ணாநகரை சேர்ந்த பிரவீன் (44) என்பவரிடம் விசாரித்ததில், அவர் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்த கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் திருவள்ளூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மதுசூதனன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.