வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கோழிப்பண்ணையை அகற்றக்கோரி வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் செயல் அலுவலர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.;

Update: 2021-03-10 22:17 GMT
பத்மநாபபுரம்: 
கோழிப்பண்ணையை அகற்றக்கோரி வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் செயல் அலுவலர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
கோழிப்பண்ணை
தக்கலை அருகே வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு குழிவிளை பகுதியில் அரசு அனுமதியின்றி கோழிப்பண்ணை செயல்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.  மேலும் மக்கள் நோய் தொற்று ஏற்பட்டு அவதிப்படுவதாகவும், கோழி பண்ணையில் உள்ள கழிவுநீர் அப்பகுதியில் தெருக்களில் வழிந்தோடுவதாகவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.
முற்றுகை போராட்டம்
இந்தநிலையில், நேற்று காலை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமையில் குழிவிளை 14-வது வார்டு மக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோழிப்பண்ணையை உடனே அகற்ற கோரி வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சி அலுவலகத்தின் முன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
பேச்சுவார்த்தை
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேரூராட்சி செயல் அலுவலர் ஷேக் முகம்மது பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக கோழிப்பண்ணையை அகற்றுமாறு கடந்த பிப்ரவரி மாதத்தில் உரிமையாளருக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே வருகிற 16-ந் தேதிக்குள் கோழிப்பண்ணையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என போராட்டக்காரர்களிடம் தெரிவித்தார். 
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை முற்றுகை போராட்டம் நடந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்