திருச்சி கிழக்கு தொகுதியில் வாகன சோதனை: 299 எவர்சில்வர் தூக்குவாளிகள் பறிமுதல்

திருச்சி கிழக்கு தொகுதியில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட 299 எவர்சில்வர் தூக்குவாளிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-03-10 21:56 GMT
மலைக்கோட்டை,

திருச்சி கிழக்கு தொகுதியில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட 299 எவர்சில்வர் தூக்குவாளிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறக்கும்படை

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடைபெறுகிறது. அதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுபொருட்கள் போன்றவற்றை அரசியல் கட்சியினர் வழங்குவதை தடுக்க ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வாகன தணிக்கை செய்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பொருட்கள், பணத்தை பறிமுதல் செய்து வருகிறாா்கள்.

299 தூக்குவாளிகள் பறிமுதல்

அதன்படி திருச்சி கிழக்கு துணை தாசில்தார் சுமதி தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று திருச்சி-புதுக்கோட்டை சாலையில் விமான நிலையம் அருகே உள்ள சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு பார்சல் நிறுவன லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.

சோதனையில் 299 எவர்சில்வர் தூக்குவாளிகள் 3 மூட்டைகளில் இருந்தது. ஆனால் அவற்றை கொண்டு செல்வதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதைத்தொடர்ந்து தூக்குவாளிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை திருச்சி கிழக்கு தாசில்தார் குகனிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்