குமரி- கேரள எல்லையில் 8 கிலோ தங்கம் சிக்கியது

குமரி-கேரள எல்லையில் நடந்த பறக்கும் படை சோதனையில் 8 கிலோ தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-03-10 21:42 GMT
களியக்காவிளை:
குமரி-கேரள எல்லையில் நடந்த பறக்கும் படை சோதனையில் 8 கிலோ தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சட்டசபை தேர்தல்
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. குமரியில் 6 சட்டமன்ற தொகுதிக்கும் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. 
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனால் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் என குமரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிக்கும் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 
8 கிலோ தங்கம் பறிமுதல்
இந்தநிலையில் நேற்று குமரி-கேரள எல்லையான களியக்காவிளையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி முருகன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரளாவில் இருந்து குமரிக்கு வேன் ஒன்று வந்தது.
அந்த வேனை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அந்த வேனில் 8 கிலோ 320 கிராம் தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணம் இருக்கிறதா? என கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் ஆவணத்தை ஒப்படைக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து தங்கத்தையும், வேனையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் விளவங்கோடு தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். 
விசாரணை
பின்னர் வேனில் வந்தவர்களிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து குமரியில் உள்ள நகைக்கடைகளுக்கு விற்பனை செய்ய நகைகளை கொண்டு வந்ததாக தெரிவித்தனர்.
பின்னர் உரிய ஆவணத்தை காண்பித்தால், நகைகளை மீண்டும் அவர்களிடம் ஒப்படைத்து விடுவோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்