பண்ருட்டி அருகே வங்கி மேலாளரின் காரில் இருந்த ரூ19 லட்சம் பறிமுதல்
பண்ருட்டி அருகே வங்கி மேலாளரின் காரில் இருந்த ரூ19 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பண்ருட்டி,
கடலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும்படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். உரிய ஆவணமின்றி எடுத்து வரப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் பண்ருட்டி அருகே நத்தம் ராமகுளம் அருகில் தேர்தல் நிலை கண்காணிப்புக்குழு அலுவலர் கிருஷ்ணராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் இரும்பு பெட்டியில் கட்டுக்கட்டாக ரூ.19 லட்சத்து 74 ஆயிரத்து 500 இருந்தது.
பணம் பறிமுதல்
இது தொடர்பாக காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில், ஆனத்தூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி மேலாளர் உன்னிகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. ஆனால் அந்த பணத்தை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணம் அவரிடம் இல்லை. இதையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு, பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி மங்களநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் இது தொடர்பாக வருமானவரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். வங்கி மேலாளர் உன்னிகிருஷ்ணன் வங்கியில் இருந்து பணத்தை யாருக்கும் கொடுக்க எடுத்துச்சென்றாரா?, அல்லது அது அவரது சொந்த பணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.