கொடைக்கானலில் வெறிச்சோடிய சுற்றுலா இடங்கள்
கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து, சுற்றுலா இடங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.
கொடைக்கானல்:
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசின் உத்தரவுப்படி நேற்று காலை முதல் இ-பாஸ் நடைமுறை கொடைக்கானலில் மீண்டும் அமலானது.
இதையொட்டி வட்டார மருத்துவ அலுவலர் ஸ்ரீதர் தலைமையிலான மருத்துவ குழுவினர், கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் சோதனை சாவடியை மீண்டும் அமைத்துள்ளனர்.
அங்கு ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களை தவிர பிற மாநிலங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வருகிற சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
மேலும் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டத்தில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
அதன்படி நேற்று மாலை வரை 250-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் திரும்பி அனுப்பப்பட்டனர்.
கொடைக்கானலுக்கு அனுமதிக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் சிலர், மருத்துவகுழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது. சுற்றுலா இடங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.
இதேநிலை நீடித்தால், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை போலவே இந்த ஆண்டும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைய வாய்ப்பு உள்ளது என்று சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பலரும் கவலை அடைந்துள்ளனர்.