விருத்தாசலம் பகுதி கடைகளில் பாக்கெட்டுகளில் காலாவதி தேதி குறிப்பிடாத கடைகளுக்கு நோட்டீஸ்
விருத்தாசலம் பகுதி கடைகளில் பாக்கெட்டுகளில் காலாவதி தேதி குறிப்பிடாத கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.
விருத்தாசலம்,
கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ் குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அந்தோணி பிரபு, சந்திரசேகர், சுந்தரமூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் விருத்தாசலத்தில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். உணவு பாதுகாப்பு துறைமூலம் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற்றுள்ளனரா? என்று பார்வையிட்டனர்.
உரிமம் மறறும் பதிவு சான்றிதழ்களை கடையில் நன்கு தெரியும்படி காட்சிப்படுத்த வேண்டும் என உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினர். விருத்தாசலம் காட்டுக்கூடலூர் ரோடு, காய்கறி மார்க்கெட், பங்களா தெரு, பஸ் நிலையம், உளுந்தூர்பேட்டை ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், காய்கறி கடைகள், சிக்கன் மற்றும் மட்டன் கடைகள், உணவகங்கள், குளிர்பான கடைகள், பேக்கரி போன்ற உணவு நிறுவனங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
10 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
அப்போது உரிமம் பெறாதவர்கள், உரிமம் பெற்று புதுப்பிக்காதவர்கள் உடனடியாக புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். பொட்டல பொருட்களின் பாக்கெட்டில் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி பற்றி குறிப்பிடாத கடைகளுக்கும், சரியான உணவு பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்காமல் வியாபாரம் செய்த கடை உரிமையாளர்களுக்கும் அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்தனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், புகையிலை பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் விதிகளை மீறி பயன்படுத்திய 10 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.