குமரியில் சிவாலய ஓட்டம் தொடங்கியது

குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் நேற்று முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்கியது.

Update: 2021-03-10 21:14 GMT
புதுக்கடை:
குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் நேற்று முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்கியது. 
சிவாலய ஓட்டம்
குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களை, மகா சிவராத்திரி அன்று ஓடிச் சென்றே வழிபடும் ‘சிவாலய ஓட்டம்’ பிரசித்தி பெற்றது. சுமார் 110 கிலோ மீட்டர் தூரம் கொண்டது, சிவாலய ஓட்டம்.
சிவராத்திரியையொட்டி காவி வேட்டி, காவித்துண்டு, ருத்ராட்சம் அணிந்து, வெறுங்காலுடன் சிறிய பையில் விபூதி எடுத்துக்கொண்டு, பனை ஓலை விசிறியுடன் இந்த ஓட்டத்தை சிவ பக்தர்கள் தொடங்குவார்கள்.
கோவில்கள் 
முன்சிறை திருமலை மகாதேவர் கோவில், திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் கோவில், திருபன்னிபாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில், மேலாங்கோடு சிவன் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு சிவன்கோவில், திருபன்றிகோடு மகாதேவர் கோவில், திருநட்டாலம் சங்கர நாராயணர் கோவில் ஆகியவை அந்த 12 சிவாலயங்கள் ஆகும்
12 சிவாலயங்களில் முதல் ஆலயமான முன்சிறை என்ற திருமலையில் இருந்து இந்த ஓட்டம் தொடங்கும். 12-வது ஆலயமான திருநட்டாலம் ஆலயத்தை தரிசிக்கும் வரை சிவ நாமத்தை உச்சரித்தபடியே இந்த ஓட்டம் நடைபெறும்.
தொடங்கியது
இந்த நிலையில் மகாசிவராத்திரி இன்று நடைபெறுவதையொட்டி குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நேற்று தொடங்கியது. இதற்காக குமரி மாவட்டம் மற்றும் கேரள மாநில பக்தர்கள் கடந்த 7 நாட்களுக்கு முன்னர் விரதத்தை தொடங்கினர்.
நேற்று மாலை முதல் திருத்தலமாகிய முன்சிறை சிவன் கோவிலில் சிவ பக்தர்கள் சாரை, சாரையாக குவிந்தனர். பின்னர் அங்கு புனித நீராடி காவி துண்டுகள் அணிந்து கையில் விசிறி உடன் புறப்பட்டனர்.
கோவிந்தா... கோபாலா...
இன்று இரவு முழுவதும் தொடர்ந்து 12 சிவாலயங்களுக்கு பக்தர்கள் கால்நடையாக நடந்தும், ஓடியும் தரிசனம் செய்கின்றனர். ஓட்டத்தின் போது கோவிந்தா... கோபாலா... என்று சரணம் கோஷம் எழுப்பி ஒவ்வொரு கோவிலாக சென்று 12-வது ஆலயமான திருநட்டாலம் ஆலயத்தில் தங்களது நேர்த்திக் கடனை நிறைவு செய்கிறார்கள்.
சிவாலய ஓட்ட பக்தர்களுக்கு வழியெங்கும் மோர், தயிர், கஞ்சி, பழ வகைகள் மற்றும் சைவ உணவுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் இரு சக்கர வாகனங்கள், வேன், ஆட்டோ, பஸ்களிலும் பயணம் செய்து 12 சிவாலயங்களையும் வழிபட்டு இரவு கண் விழித்து சிவராத்திரியை நிறைவு செய்கிறார்கள்.
சிவாலய ஓட்டம் நேற்று மாலை தொடங்கியதை முன்னிட்டு மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் முதல் சிவாலயமான முன்சிறை மகாதேவர் கோவிலில் குவிந்தனர்.

மேலும் செய்திகள்