ஏப்ரல் மாதம் 6-ந் தேதி ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்குகிறது; குண்டம் இறங்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா ஏப்ரல் மாதம் 6-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. குண்டம் விழாவில் பக்தர்களுக்கு தீ மிதிக்க அனுமதி கிடையாது.
ஈரோடு
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா ஏப்ரல் மாதம் 6-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. குண்டம் விழாவில் பக்தர்களுக்கு தீ மிதிக்க அனுமதி கிடையாது.
பெரிய மாரியம்மன் கோவில்
ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. பெரிய மாரியம்மன் மற்றும் அதன் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதில் மஞ்சள் நீராட்டு விழாவின்போது ஈரோடு மாநகரம் விழாக்கோலம் பூண்டு காணப்படும். பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்களின் கம்பங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும். அப்போது வழிநெடுகிழும் பக்தர்கள் திரண்டு நின்று கம்பங்களின் மீது உப்பு, மிளகு வீசுவார்கள்.
கடந்த ஆண்டு திருவிழா தொடங்கும்போது கொரோனா தொற்று பரவல் காணப்பட்டது. இதனால் திருவிழா ரத்து செய்யப்பட்டது.
எளியமுறையில் திருவிழா
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் தற்போது குறைந்து இருப்பதால், இந்த ஆண்டு திருவிழா நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் பக்தர்கள் காத்திருந்தனர். திருவிழாவை நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலையில் நடந்தது. இந்த கூட்டத்தில் திருவிழாவை அதிக கூட்டமின்றி எளிய முறையில் நடத்த வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று காலை கோவிலின் செயல் அதிகாரி ரமணிகாந்தன் முன்னிலையில் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்களை போட்டு அருள்வாக்கு கேட்கப்பட்டது. அப்போது திருவிழாவை நடத்த வேண்டும் என்ற அனுமதி கிடைத்தது. அதன்பிறகு இந்த ஆண்டு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை எளிமையான முறையில் நடத்தி கொள்ள முடிவு செய்யப்பட்டது.
குண்டம் விழா
வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி இரவு 9 மணிக்கு பூச்சாட்டுதலுடன் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்குகிறது. 7-ந் தேதி இரவு 10 மணிக்கு கோவில்களில் கம்பங்கள் நடப்படுகின்றன. 8-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா நடத்தப்படுகிறது. கொரோனா தொற்று பரவல் உள்ளதால், கோவில் பூசாரிகள் மட்டும் தீ மிதிக்க உள்ளனர். குண்டம் இறங்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
அன்றைய தினம் காலை 9 மணிக்கு சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடக்கிறது. 9-ந் தேதி மாவிளக்கு மற்றும் கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறும். 12-ந் தேதி மதியம் 3 கோவில்களிலும் கம்பங்கள் பிடுங்கப்பட்டு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. 13-ந் தேதி மறுபூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.