நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், சேந்தமங்கலம் மற்றும் குமாரபாளையம் என 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த காலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு சட்டசபை தொகுதிகளுக்கு அந்தந்த உதவி கலெக்டர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆவார்கள். எனவே அவர்களது அலுவலகத்திலேயே வேட்புமனுக்களை பெற்றுக்கொள்வார்கள்.
மீதம் உள்ள 4 தொகுதிகளுக்கும் சப்-கலெக்டர் நிலையிலான அதிகாரிகள் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்படுவார்கள். இவர்கள் ஏதாவது ஒரு துறையின் மாவட்ட அலுவலராக இருப்பார்கள். எனவே ராசிபுரம், பரமத்திவேலூர், குமாரபாளையம் மற்றும் சேந்தமங்கலம் தொகுதிகளில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் கலெக்டர் அலுவலகம் வந்து வேட்புமனுதாக்கல் செய்வார்கள். அதே நேரத்தில் தொகுதியில் உள்ள தாசில்தார் உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்படுவதால், அவரும் வேட்புமனுக்களை பெறுவார்.
வேட்புமனு தாக்கல்
ஆனால் இந்த முறை வழக்கம்போல் நாமக்கல், திருச்செங்கோடு தொகுதிகளுக்கு போட்டியிடுவோர் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும், கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மீதமுள்ள 4 தொகுதிகளில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் அந்தந்த தொகுதிகளில் உள்ள தாசில்தார் அலுவலகங்களில் வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலரே பெற்றுக்கொள்வார் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி, வேட்புமனு தாக்கல் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும். ஒவ்வொரு வேட்பாளருடனும் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணியில் நேரடியாக சுமார் 9,875 பேர் ஈடுபடுத்தப்பட இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வேட்புமனு தாக்கலையொட்டி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.