நாமக்கல்லில் தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்: உதவி கலெக்டர் கோட்டைக்குமார் தொடங்கி வைத்தார்
நாமக்கல்லில் தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலத்தை உதவி கலெக்டர் கோட்டைக்குமார் தொடங்கி வைத்தார்.;
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் சட்டசபை தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று நாமக்கல்லில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தை உதவி கலெக்டர் கோட்டைக்குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் மோகனூர் சாலை, பஸ் நிலையம், திருச்சி சாலை, டாக்டர் சங்கரன் சாலை வழியாக மீண்டும் அரசு ஆஸ்பத்திரியை வந்தடைந்தது. இதில் தேர்தல் நாளான ஏப்ரல் மாதம் 6-ந் தேதியை குறிக்கும் வகையில் மாணவிகள் அட்டைகளை ஏந்தி சென்றனர்.
இந்த ஊர்வலத்தில் தாசில்தார் தமிழ்மணி, செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்கண்ணன் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.