10 ஆயிரத்து 645 மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டு
சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகள் 10 ஆயிரத்து 645 பேருக்கு தபால் ஓட்டுப்போட விண்ணப்ப படிவங்களை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.;
சிவகங்கை,
தபால் ஓட்டு
நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் ஓட்டு போடலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டுக்கான விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கையை அடுத்த காஞ்சிரங்காலில் நடந்தது.
விழாவில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டுக்கான விண்ணப்ப படிவங்களை வழங்கி பேசியதாவது:-
விண்ணப்பம்
தமிழக சட்டசபை தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் 80 வயதிற்கும் மேற்பட்டவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் ஓட்டளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் காரைக்குடி தொகுதியில் 1,976 பேரும், திருப்பத்தூர் தொகுதியில் 2,543, பேரும், சிவகங்கை தொகுதியில் 2,662 பேரும்,, மானாமதுரை (தனி) தொகுதியில் 3,464 பேரும் சேர்த்து மொத்தம் 10,645 பேர் உள்ளனர்.
இதே போல் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் காரைக்குடி தொகுதியில் 7,581 பேரும், திருப்பத்தூர் தொகுதியில் 6,820, பேரும்,, சிவகங்கை தொகுதியில் 8,624 பேரும், மானாமதுரை(தனி) தொகுதியில் 5,827 பேரும் சேர்த்து மொத்தம் 28,852 பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தபால் ஓட்டு போட விண்ணப்பம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் சிவகங்கை கோட்டாட்சியர் முத்துக்கழுவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரத்தினவேல், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.