திருப்பூரில் நூல் விலை உயர்வை கண்டித்து வருகிற 15ந் தேதி பனியன் உற்பத்தி மற்றும் கடையடைப்பு போராட்டம்

திருப்பூரில் நூல் விலை உயர்வை கண்டித்து வருகிற 15 ந் தேதி பனியன் உற்பத்தி மற்றும் கடையடைப்பு போராட்டம்

Update: 2021-03-10 19:50 GMT
திருப்பூர், மார்ச்:
திருப்பூரில் நூல் விலை உயர்வை கண்டித்து வருகிற 15-ந் தேதி பனியன் உற்பத்தி மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என தொழில்துறையினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலோசனை கூட்டம் 
பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் ஏற்கனவே எடுத்துவைத்த ஆர்டர்களை அனுப்ப முடியாமல் தொழில்துறையினர் நஷ்டம் அடைந்து வருகிறார்கள். இதுபோல் புதிய ஆர்டர்களை எடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே நூல் விலையை நூற்பாலைகள் குறைக்க வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், சைமா சங்கம், டீமா சங்கம், ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு உள்பட பலரும் நூற்பாலைகளுக்கு கடிதம் அனுப்பினர்.
இதற்கிடையே இந்த கோரிக்கைகளை பொருட்படுத்தாமல் நூற்பாலைகள் இந்த மாதமும் நூல் விலையை உயர்த்தியது. இதனால் தொழில்துறையினர் நூல் விலையை கட்டுப்படுத்தவும், விலை உயர்வை கண்டித்தும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
15-ந் தேதி உற்பத்தி நிறுத்தம் 
இதன் தொடர்ச்சியாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நேற்று மாலை தொழில்துறையினர் மற்றும் தொழிற்சங்கத்தினருடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் தலைமை தாங்கி பேசினார். இதில் சைமா, டீமா, டெக்பா, நிட்மா, சிம்கா, தொழில் பாதுகாப்பு குழு உள்ளிட்ட பல்வேறு தொழில்சங்க நிர்வாகிகளும், ஏ.ஐ.டி.யு.சி, சி.ஐ.டி.யு. எல்.பி.எப் உள்ள தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நூல் விலை உயர்வால் பின்னலாடை வர்த்தகம் பாதிக்கப்படுகிறது. இது உற்பத்தி நிறுவனங்கள் முதல் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் முதல் பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், நூல் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் வருகிற 15-ந் தேதி பனியன் உற்பத்தி நிறுத்தம் செய்வது. மேலும், வணிகர்களின் ஆதரவு பெற்று கடையடைப்பு போராட்டம் நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்