சங்கரன்கோவிலில் நஷ்டஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி
சங்கரன்கோவிலில் நஷ்டஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
சங்கரன்கோவில்:
சிவகிரி தாலுகா துரைச்சாமியாபுரத்தை சேர்ந்தவர் ஆபிரகாம் மகன் ஆறுமுகச்சாமி. இவர் சொந்தமாக வேன் வைத்துள்ளார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டியில் உள்ள தனியார் மில்லில் இருந்து பணியாளர்களை ஏற்றிக்கொண்டு வேனில் வந்து கொண்டு இருந்தார்.
சங்கரன்கோவில் அருகே உள்ள பருவக்குடி பகுதியில் வந்த போது எதிரே வந்த அரசு பஸ் நேருக்கு நேர் மோதியது. இதில் வேன் பலத்த சேதமடைந்தது. விபத்தில் சேதமடைந்த தனது வேனுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று சங்கரன்கோவில் சார்பு நீதிமன்றத்தில் ஆறுமுகச்சாமி வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூ.2,38,409 நஷ்டஈடு வழங்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் நஷ்டஈடு வழங்காததால் சார்பு நீதிபதி சொர்ணக்குமார் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
இதன்பேரில் சங்கரன்கோவில் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த மதுரை போக்குவரத்து கழகத்தை சேர்ந்த அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.