செங்கோட்டை அருகே லாரி மீது ஆட்டோ மோதல்; பெண் பலி
செங்கோட்டை அருகே லாரி மீது ஆட்டோ மோதியதில் பெண் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே லாரி மீது ஆட்டோ மோதியதில் பெண் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆட்டோவில் பயணம்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பெரியபிள்ளைவலசை கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பா மனைவி பழனியம்மாள் (வயது 50). இவரது உறவினர் வேலம்மாள் (40). இவர்கள் 2 பேரும் தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை கிராமத்தில் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வேலையை முடித்து 2 பேரும் ஒரு ஆட்டோவில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பார்டர் அருகில் வந்த போது, சாலையோரத்தில் ஒரு லாரியில் மரத்தடிகளை தொழிலாளர்கள் ஏற்றிக் கொண்டு இருந்தனர்.
பெண் பலி
கண் இமைக்கும் நேரத்தில் ஆட்டோ, லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வேலம்மாள், ஆட்டோ டிரைவர் ராமச்சந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள்.
இதுகுறித்து உடனடியாக செங்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான பழனியம்மாள் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கோட்டை அருேக லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.