வருகிற சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் 11 ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம்

வருகிற சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் 11 ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2021-03-10 18:46 GMT
கரூர்
சட்டமன்ற தேர்தல்
கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் நாளன்று அனைத்து வாக்காளர்களும் வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் முன்பு வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டையை வாக்குச்சாவடியில் கட்டாயம் காட்டப்பட வேண்டும். வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க இயலாதவர்கள் கீழ்காணும் 11 ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை காண்பிக்க வேண்டும். 
பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், மத்திய, மாநில அரசால் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளால் வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம், பேன் கார்டு, இந்திய பதிவாளரால் என்பிஆர்-ன் கீழ் வழங்கப்பட்ட அடையாள அட்டை, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, தொழிலாளர் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு அரசால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, ஆதார் அட்டை, வெளிநாடுகளில் வாழும் வாக்காளர்கள் தங்களது அசல் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி வாக்களிக்க தெரிவிக்கப்படுகிறது.
வாக்காளர் அடையாள அட்டை
மேலும், வாக்காளர்களுக்கு உதவும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள சிறு வேறுபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அட்டையில் உள்ள புகைப்படத்துடன் வாக்காளர்களை உறுதிப்படுத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாக்காளர் தனக்கு ஏற்கனவே வேறு சட்டமன்ற தொகுதியில் பெறப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை தற்போது வாக்களிக்கும் வாக்குச்சாவடியில் தனது பெயர் இருக்கும் பட்சத்தில் மேற்படி வாக்காளர் அடையாள அட்டையை காட்டி வாக்களிக்கலாம். 
மேலும், புகைப்படத்தில் ஏதேனும் மாறுபாடு இருப்பின் மேற்குறிப்பிட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை காட்டி வாக்களிக்கலாம். தற்போது 99 சதவீதத்திற்கும் மேலான வாக்காளர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை உள்ளதாலும், மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 99 சதவீதம் பேர் ஆதார் அட்டையை வைத்துள்ளதாலும், வாக்காளர் தகவல் சீட்டை மட்டும் பயன்படுத்தி வாக்களிக்க இயலாது. எனவே வாக்காளர் அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள 11 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை ஆவணமாக காண்பித்து தேர்தலில் வாக்களிக்கலாம். 
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்