கரூரில் தேர்தல் விழிப்புணர்வு மினி மாரத்தான்
வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதை வலியுறுத்தி நேற்று கரூரில் தேர்தல் விழிப்புணர்வு மினி மாரத்தான் நடைபெற்றது.
கரூர்
மினி மாரத்தான்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100 சதவீதம் வாக்களிக்க தயாராகுங்கள், எனது வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதை வலியுறுத்தி மினி மாரத்தான் நடைபெற்றது.
இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மலர்விழி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மினி மாரத்தான் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கி தாந்தோணிமலை அரசு கலை கல்லூரியில் முடிவடைந்தது. இதில் மாணவ - மாணவிகள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
பேட்டி
முன்னதாக மாவட்ட தேர்தல் அலுவலர் மலர்விழி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை அனைவருக்கும் வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
எந்தவொரு காரணங்களுக்காகவும் நமது வாக்கை பணத்திற்காகவோ, பரிசு பொருட்களுக்காகவோ விற்க கூடாது.
ஒருமுறைக்கு பலமுறை
நாம் நாள்தோறும் பயன்படுத்தும் வீட்டு உபயோக பொருட்களை கடைக்கு சென்று வாங்கும் போது தரமானதாக இருக்க வேண்டும் என்று ஒருமுறைக்கு பலமுறை பார்த்து பார்த்து தேர்வு செய்து வருகிறோம். இவற்றைவிட முக்கியமானது 5 ஆண்டு காலம் நம்மை ஆட்சி செய்கின்ற ஆட்சியாளர்கள் நல்லாட்சி தரக்கூடியவர்களாகவும், நமது எதிர்காலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்பவர்களாகவும் இருக்கும் வகையில் தேர்ந்தெடுப்பதாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தநிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மகளிர் திட்ட இணை இயக்குனர் வாணிஈஸ்வரி, கரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியன், கரூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.