அச்சமின்றி வாக்களிக்க இளம் வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்பு
அச்சமின்றி வாக்களிக்க இளம் வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்றனர்
ராமநாதபுரம்,
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து, தேர்தல் பணிகளில் பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவித்து 100 சதவீதம் வாக்குப்பதிவு என்ற இலக்கை எய்திடும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 18 வயது பூர்த்தியான முதன்முறை வாக்காளர்களான கல்லூரி மாணவிகளுக்கு தேர்தல் நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் வாக்காளர் விழிப்பணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில், மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் கல்லூரி மாணவியர்கள், ‘மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்திய குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலும் இன்றியும் வாக்களிப்போம் என உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், கூடுதல் கலெக்டர் பிரதீப் குமார், ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் சுமதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், ராமநாதபுரம் தாசில்தார் ரவிச்சந்திரன் உள்பட அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்த பெண்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.