சாலையோரம் கடைநடத்த அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் தள்ளுவண்டிக்கடைக்காரர் தீக்குளிக்க முயற்சி
தள்ளுவண்டிக்கடைக்காரர் தீக்குளிக்க முயற்சி
திருப்பூர்
திருப்பூர் பட்டுக்கோட்டையார்நகரை சேர்ந்தவர் கணபதி (வயது 30). இவர் திருப்பூர் பழைய பஸ் நிலையம் முன்பு தள்ளுவண்டியில் கம்பங்கூழ், தர்பூசணி விற்பனை செய்து வருகிறார். இந்தநிலையில் தள்ளுவண்டி கடையை ரோட்டோரம் போடுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி கொடுக்காமல் சத்தம் போட்டு வந்துள்ளனர். அருகில் மற்ற தள்ளுவண்டிகள் இருக்கும்போது தன்னை மட்டும் கடை போட அனுமதிக்காமல் அதிகாரிகள் செயல்படுவதாக கூறி வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த கணபதி, நேற்று இரவு 7 மணி அளவில் பழைய பஸ் நிலையம் முன்பு பாட்டிலில் இருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக தெரிகிறது. இதை அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கவனித்து அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். மேலும் குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து கணபதி மேல் ஊற்றினார்கள். பின்னர் கணபதியை திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் பழைய பஸ் நிலையம் முன்பு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.