குடிநீர் வராததை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-03-10 17:13 GMT
விழுப்புரம், 


விழுப்புரம் அருகே உள்ள தோகைப்பாடி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் விழுப்புரம் - திருக்கோவிலூர் நெடுஞ்சாலையில் தற்போது சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதி மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து கொண்டு செல்லப்படும் குழாயானது அடைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அவர்கள் பலமுறை காணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை.

சாலை மறியல்

இந்நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 9.15 மணியளவில் தோகைப்பாடி மெயின் ரோட்டுக்கு திரண்டு வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விழுப்புரம் - திருக்கோவிலூர் நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் காணை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் சற்குணம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் பேசி குடிநீர் பிரச்சினையை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், காலை 9.40 மணியளவில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.

மேலும் செய்திகள்