நாளை வேட்பு மனுதாக்கல் தொடக்கம்: விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார்
சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நாளை தொடங்குகிறது. இதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
விழுப்புரம்,
தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வேட்பு மனுதாக்கல் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய 19-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 20-ந் தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் 22-ந் தேதியாகும்.
விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக துணை ஆட்சியர் ரகுகுமார், மயிலம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக துணை ஆட்சியர் பெருமாள், திண்டிவனம் (தனி) தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக சப்-கலெக்டர் அனு, வானூர் (தனி) தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக துணை ஆட்சியர் சிவா, விழுப்புரம் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக விழுப்புரம் கோட்டாட்சியர் ஹரிதாஸ், விக்கிரவாண்டி தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக துணை ஆட்சியர் அறிவுடைநம்பி, திருக்கோவிலூர் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக கோட்டாட்சியர் சாய்வர்தினி ஆகியோரும் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்பாடுகள் தயார்
நாளை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் தொகுதிக்கு வேட்பு மனுதாக்கல் செய்ய மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் பெறப்படுகிறது.
முன்பு நடைபெற்ற தேர்தல்களில் வேட்பு மனுதாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 4 பேர் என மொத்தம் 5 பேர் மட்டும் தேர்தல் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டது. தற்போது கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக வேட்பாளருடன் 2 பேர் என மொத்தம் 3 பேர் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்குள் செல்ல வேண்டும், முன்பு வேட்பாளருடன் வருபவர்கள் 5 வாகனங்களில் வருவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 2 வாகனங்களில் மட்டுமே வர வேண்டும் என்றும் மற்றவர்கள் தேர்தல் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு அப்பால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கடுமையான நிபந்தனை விதித்துள்ளது.
தடுப்புகள் அமைக்கும் பணி
எனவே வேட்பாளருடன் 2 பேர் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் தேர்தல் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு அப்பால் தடுத்து நிறுத்தப்படுவார்கள்.
இதற்கேற்ப மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ளே யாரும் செல்லாத அளவிற்கு அலுவலகங்களுக்கு வரக்கூடிய சாலைகளில் அடையாள குறியீடுகள் வரையப்பட்டுள்ளன.
மேலும் போலீசார், தடுப்புகளை அமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சியினர் ஊர்வலமாக வந்து மனு கொடுப்பதை தடுக்கும் வகையில் வேட்பு மனுதாக்கல் செய்யப்படும் நாட்களில் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலகங்கள் முன்பு கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர்.