தேனி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை
தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
தேனி:
தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
பலத்த மழை
கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில், தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. நேற்றும் பகலில் கடும் வெயில் வாட்டி வதைத்தது. இந்தநிலையில் நேற்று மாலை மாவட்டத்தின் பல இடங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. தேனி, உப்புக்கோட்டை, உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பழனிசெட்டிபட்டி வாசுகி காலனியில் மழையுடன் பலத்த காற்று வீசியபோது, அங்கிருந்த தென்னை மரம் ஒன்று சாய்ந்து அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது. இதில் அந்த வீடு சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மலைக்கிராமங்கள்
இதேபோல் போடி அருகே உள்ள குரங்கணி, பிச்சாங்கரை, கொட்டகுடி, நரிப்பட்டி, டாப் ஸ்டேஷன் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. சுமார் 1½ மணி நேரமாக பெய்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. கடந்த சில வாரங்களாக இந்த மலைக்கிராமங்களில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று மாலை பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. போடி நகரிலும் பலத்த மழை கொட்டியது.
ஆண்டிப்பட்டி நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான திம்மரசநாயக்கனூர், டி.சுப்புலாபுரம், பிச்சம்பட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி, மாயாண்டிபட்டி, ஜம்புலிபுத்தூர், வாடிப்பட்டி, கன்னியமங்கலம், மணியாரம்பட்டி, மறவபட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று மாலை சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.