தாவரவியல் பூங்காவில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிந்து உள்ளனரா? என்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-03-10 14:38 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து உள்ளது. தற்போது தினமும் 10-க்கும் கீழ் கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. ஆனால் மாவட்ட எல்லையை ஒட்டி உள்ள கேரளா மாநிலத்தில் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. 

இதனால் நீலகிரியில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு எல்லையில் உள்ள 5 சோதனைச்சாவடிகளில் தடுத்து நிறுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 

அதன் பின்னர் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
இந்தநிலையில் நேற்று போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், ஊட்டி நகரில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிந்து செல்கிறார்களா என்று சேரிங்கிராஸ், நகராட்சி மார்க்கெட் மேல் பகுதிக்கு நேரில் சென்று திடீரென ஆய்வு செய்தார். 

அப்போது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சிலர் முகக்கவசம் அணியாமல் சென்றது தெரியவந்தது.

அவர்களை தடுத்து நிறுத்தி, கொரோனா பரவலை தடுக்க கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார். மேலும் சிலர் முகக்கவசத்தை பாக்கெட்டில் வைத்தும், சரியான விதத்தில் அணியாமலும் இருந்தனர். 

வாய், மூக்கு பகுதிகளை மூடியவாறு முகக்கவசம் அணிய வேண்டும் என்று கூறி, முகக்கவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் வருகை தரும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார்.

முகக்கவசவம் அணியாத சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். மேலும் புகைப்படம் எடுத்தவுடன் முகக்கவசத்தை திரும்ப அணிய வேண்டும். கையில் வைத்திருந்தும் அணியாமல் இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. ஆய்வின் போது போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அப்துல்கலாம், ராஜன்பாபு உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்