கோவில்பட்டி தாலுகா அலுவலகத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்து இறங்கின

கோவில்பட்டி தாலுகா அலுவலகத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்திறங்கின.

Update: 2021-03-10 14:30 GMT
கோவில்பட்டி, மார்ச்:
கோவில்பட்டி தாலுகா அலுவலகத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்து இறங்கின.

வாக்குப்பதிவு எந்திரங்கள் வருகை

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முன்பு கோவில்பட்டி சட்டசபை தொகுதிக்கு 282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் கூடுதலாக 93 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு 375 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வாக்குப்பதிவை முன்னிட்டு அந்தந்த தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று காலையில் தாலுகா அலுவலகத்திற்கு வந்திறங்கின.

அறைக்கு ‘சீல்’ வைப்பு

488 வாக்குப்பதிவு எந்திரங்கள், 450 கண்ட்ரோல் யூனிட் எந்திரங்கள், 450 பேலட் யூனிட் எந்திரங்கள் வந்தன. இதனை கோவில்பட்டி தொகுதி தேர்தல் அதிகாரியும், உதவி கலெக்டருமான சங்கரநாராயணன் பார்வையிட்டார்.
பின்னர் தாசில்தார் அமுதா, கயத்தாறு தாசில்தார் பேச்சிமுத்து, தேர்தல் துணை தாசில்தார் சுரேஷ், துணை தாசில்தார் நாகராஜன், அ.தி.மு.க. நிர்வாகி குமார், தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகேசன், வக்கீல் அணி மாவட்ட அமைப்பாளர் ராமச்சந்திரன், பா.ஜனதா நகர தலைவர் பாலசுப்பிரமணியன், காங்கிரஸ் நகர தலைவர் சண்முகராஜ், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் பரமராஜ், நகர துணை செயலாளர் முனியசாமி ஆகியோர் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் தனி அறையில் இறக்கி வைத்து பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன. அந்த அறை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்