100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு வாகன பிரசாரம்- மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை, மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.;

Update: 2021-03-10 12:48 GMT
தூத்துக்குடி, மார்ச்:
தூத்துக்குடியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.

வாகன பிரசாரம்

சட்டமன்ற பொதுத்தேர்தலில் “100 சதவீதம் வாக்களிப்போம்” என்ற விழிப்புணர்வு வாகன பிரசாரம் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் தலைமை தாங்கி பிரசார வாகனத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு

பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்களிடையே வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 3 வீடியோ பிரசார வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அனைவரும் ஏப்ரல் 6-ந் தேதி கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். நமது மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையிலும், கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையிலும் இந்த பிரசார வாகனங்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்