கோவையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு மீண்டும் அபராதம் விதிக்க மாநகராட்சி ஆணையாளர் உத்தரவு

கோவையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு மீண்டும் அபராதம் விதிக்க மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2021-03-10 06:11 GMT
கோவை,

கோவையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு மீண்டும் அபராதம் விதிக்க மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். இதனால் பறக்கும் படையினர் சோதனையை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும், தினமும் மாவட்டம் முழுவதும் 50 பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள். கோவை நகரில் ஒண்டிப்புதூர், கணபதி, சரவணம்பட்டி, காளப்பட்டி, பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பரவல் இன்னும் உள்ளது.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் நேற்று கொரோனா பரவலில் மொத்தம் 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

கோவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மாநகராட்சி சுகாதாரத்துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

 இதைத்தொடர்ந்து கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள 5 மண்டலங்களிலும் ஒவ்வொரு மண்டலத்துக்கும் தனித்தனி பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு சோதனைகள் தீவிரப்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பஸ்நிலையங்கள், பொதுமக்கள் கூடும் பகுதிகள், கடை வீதிகளில் பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். 

முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். ஏற்கனவே உள்ள வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அடங்கிய பறக்கும் படைகள் மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

எனவே டீக்கடைகள், ஓட்டல்கள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட கடை உரிமையாளர்கள் உரிய கவனம் செலுத்துமாறும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்