நாடார் சமுதாயத்துக்கு 40 தொகுதிகளை ஒதுக்க கோரி ஆர்ப்பாட்டம் சத்திரிய நாடார் இயக்கம் நடத்தியது
நாடார் சமுதாயத்துக்கு 40 சட்டமன்ற தொகுதிகள், 20 சதவீத தனி உள் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை,
நாடார் சமுதாயத்தின் உரிமையை மீட்க 40 சட்டமன்ற தொகுதிகளை நாடார் சமுதாயத்துக்கு ஒதுக்க தனி ஒதுக்கீடு அறிவிக்கவேண்டும், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 30 சதவீத இட ஒதுக்கீட்டில் நாடார் சமுதாயத்துக்கு 20 சதவீத தனி உள் இட ஒதுக்கீடு அறிவிக்க வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஜனநாயக உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கத்தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால் தலைமை தாங்கினார். கூடுதல் பொதுச்செயலாளர் எம்.மாரித்தங்கம், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் எச்.ஸ்டீபன், தமிழ்நாடு நாடார் சங்கத்தலைவர் ஜே.முத்துரமேஷ் நாடார், ஆலந்தூர் நாடார் சங்கத்தலைவர் பி.கணேசன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
அமைந்தகரை நாடார் சங்கத்தலைவர் வி.எஸ்.முத்துப்பாண்டியன் வரவேற்றுப்பேசினார். நாடார் இளைஞர் பேரவை தலைவர் டி.ராஜகுமார், நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தலைவர் த.பத்மநாபன், செயலாளர் மயிலை பி.சந்திரசேகர், சென்னைவாழ் நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.தங்கமுத்து, தமிழ்நாடு வணிகர் சங்கத்தலைவர் ஏ.முத்துகுமார், சென்னை-சென்னை புறநகர் நாடார் கூட்டமைப்பின் தலைவர் கொளத்தூர் த.ரவி, தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.விஜயகுமார்,
சென்னை-சென்னை புறநகர் நாடார் பேரவை தலைவர் செ.அருணாசலமூர்த்தி, காமராஜர் ஆதித்தனார் கழகத்தலைவர் சிலம்பு சுரேஷ், ஒரகடம் வட்டார நாடார் ஐக்கிய சங்கத்தலைவர் டி.செல்வகுமார், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வடசென்னை கிழக்கு மாவட்டத்தலைவர் பி.செந்தில்முருகன் உள்பட பல்வேறு நாடார் சங்க நிர்வாகிகள், பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம்
முன்னதாக ஆர்.சந்திரன் ஜெயபால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக மக்கள்தொகையின் அடிப்படையில் நாடார் சமுதாயம் மிகப்பெரிய சமுதாயம். கல்வி, வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டில் நாடார் சமுதாயம் புறக்கணிக்கப்படுகிறது. ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கியதுபோல நாடார் சமுதாயத்துக்கு 40 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்க வேண்டும். இதன் முதல் கட்டமாக கன்னியாகுமரியில் 6 சட்டமன்ற தொகுதிகளை மீட்போம். பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 30 சதவீத இட ஒதுக்கீட்டில் நாடார் சமுதாயத்துக்கு 20 சதவீத தனி உள் இட ஒதுக்கீடும் தரவேண்டும். எங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம்.
சட்டமன்ற தேர்தலில் 40 சட்டமன்ற தொகுதிகளை நாடார்களுக்கு ஒதுக்கும் கட்சிகளுக்கு நாடார் சமுதாயம் ஆதரவு கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில், தமிழ் புரட்சி களம் கட்சியின் பொருளாளர் எஸ்.ஆர்.பி.ராஜன் நன்றி கூறினார்.