ஈரோட்டில் இருந்து 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு- கலெக்டர் கதிரவன் பார்வையிட்டார்

ஈரோட்டில் இருந்து 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் பார்வையிட்டார்.

Update: 2021-03-09 21:41 GMT
ஈரோடு
ஈரோட்டில் இருந்து 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் பார்வையிட்டார்.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வாக்குச்சாவடி மையங்களை தயார் செய்தல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தயார் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஈரோடு ரெயில்வேகாலனி மாநகராட்சி மேல்நிலை பள்ளிக்கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் வாக்குச்சாவடி மையங்களுக்கு எந்தெந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பி வைப்பது என்று கணினி சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று காலை நடந்தது.
கலெக்டர் ஆய்வு
ஈரோடு ரெயில்வே காலனியில் உள்ள பள்ளிக்கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வி.வி.பேட் ஆகிய கருவிகள் அரசியல் கட்சியினரின் முன்னிலையில் பிரித்து லாரிகளில் ஏற்றப்பட்டது. இந்த பணிகளை ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த தேர்தல் உபகரண கருவிகளை கொண்டு செல்லும் லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும், போலீஸ் பாதுகாப்புடன் கருவிகள் கொண்டு செல்லப்பட்டன.
பரிசோதனை
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் ஓட்டுப்பதிவுக்கு தேவையான கருவிகளை விட கூடுதலாக 20 சதவீதம் அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு 24 மணிநேரமும் கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்படுகிறது. தேர்தல் பார்வையாளர் வந்த பிறகு மீண்டும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பரிசோதனை செய்யப்படும்.
வாக்குப்பதிவுக்கு முந்தைய தினம் வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
வீடியோ பதிவு
மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 741 வாக்குச்சாவடிகளில் 118 வாக்குச்சாவடிகள் கடம்பூர், பர்கூர் போன்ற மலைப்பகுதிகளில் உள்ளன. அதில் அந்தியூர் பகுதியில் 17 வாக்குச்சாவடிகள், பர்கூர் பகுதியில் 21 வாக்குச்சாவடிகளில் இணையதள வசதி கிடையாது. அங்கு வீடியோ பதிவு செய்யப்படும். மேலும், வனத்துறையின் வாக்கிடாக்கி மூலமாக தகவல் சேகரிக்கப்படும்.
இதேபோல் மலைப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு பணியாளர்கள் சென்று தேர்தல் பணிகளை மேற்கொள்ள சிரமம் ஏற்படும். எனவே அங்குள்ள வாக்குச்சாவடிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதில், கணினி சுழற்சி முறையை பின்பற்றாமல் பணி ஆணை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். அனுமதி கிடைத்ததும் அவர்களுக்கு அங்கேயே பணி செய்ய உத்தரவு வழங்கப்படும். அந்த வாக்குச்சாவடிகளில் பெண் பணியாளர்கள் பயன்படுத்தப்பட மாட்டார்கள்.
கழுதைகள்
கத்திரிமலை வாக்குச்சாவடிக்கு கழுதைகள் மூலமாக வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு வந்தன. இந்த தேர்தலின்போது வாகனங்கள் மூலமாக கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முயற்சி வெற்றி பெறவில்லையென்றால் வழக்கம்போல் கழுதை மூலமாக கொண்டு செல்லப்படும். தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 16 ஆயிரம் பேரில் 3 ஆயிரத்து 20 பேர் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளனர்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.

மேலும் செய்திகள்