பெண்ணிடம் உல்லாசமாக இருக்கலாம் என அழைத்து தொழிலாளியை மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது

பெண்ணிடம் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தைக்கூறி அழைத்து தொழிலாளியை மிரட்டி பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-03-09 21:40 GMT
பெருந்துறை
பெண்ணிடம் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தைக்கூறி அழைத்து தொழிலாளியை மிரட்டி பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆசை வார்த்தைக்கூறி...
திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 45). இவர் கட்டிட உள் அலங்கார வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், ஈரோடு மாவட்டம் பெருந்துறை நேரு வீதியை சேர்ந்த பாலக்கண்ணன் என்பவருக்கும், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபியில் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. 
இந்த நிலையில் பாலக்கண்ணன் நேற்று முன்தினம் மூர்த்திக்கு போன் செய்து தன்னிடம் பெண்கள் இருப்பதாகவும், பெருந்துறைக்கு வந்தால் அவர்களிடம் உல்லாசமாக இருக்கலாம் எனவும் ஆசை வார்த்தைக்கூறி அழைத்து உள்ளார். 
பணம் பறிப்பு
இதை உண்மை என நம்பி இரவு பெருந்துறைக்கு மூர்த்தி வந்து உள்ளார். பெருந்துறை வந்த மூர்த்தியை பாலக்கண்ணன் அழைத்துக்கொண்டு நேரு வீதிக்கு சென்று உள்ளார். பின்னர் அங்கு ஒரு இடத்தில் மூர்த்தியை நிற்க வைத்துவிட்டு சிறிது நேரத்தில் திரும்பி வருவதாக கூறி சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் 3 பேருடன் மூர்த்தியை நோக்கி பாலக்கண்ணன் வந்து உள்ளார். 
அருகில் வந்ததும் திடீரென அவர்கள் 4 பேரும் சேர்ந்து மூர்த்தியை இறுக்க பிடித்தபடி இருக்கிற பணத்தை எங்களிடம் கொடுத்துவிடு என மிரட்டல் விடுத்ததுடன், அவர் பாக்கெட்டில் இருந்த ரூ.2 ஆயிரத்தையும் பறித்தனர். இதுகுறித்து வெளியே சொன்னால் ெகாலை செய்து விடுவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். 
கைது 
இதுகுறித்து பெருந்துறை போலீசில் மூர்த்தி புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியிடம் பணம் பறித்த 4 பேரையும் வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையே பெருந்துறை காஞ்சிக்கோவில் ரோட்டில் சந்தேகப்படும் வகையில் 4 பேர் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று 4 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், ‘அவர்கள் சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த பாலக்கண்ணன் (30), தமிழரசன் (29), தஞ்சாவூரை சேர்ந்த சூர்யா (28), ராசிபுரத்தை சேர்ந்த வினோத்குமார் (30) என்பதும், ெபருந்துறை பகுதியில் தங்கி இருந்து தனியார் நிறுவனங்களில் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வரும் இவர்கள் மூர்த்தியை மிரட்டி பணம் பறித்ததும்,’  தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். 
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்