தமிழ்நாடு சட்டப்பேரவை தொகுதி பட்டியலில் 104 வது இடத்தை பிடிக்கிறது பவானி சட்டமன்ற தொகுதி. காவிரி ஆறு, பவானி ஆறு ஆகிய 2 ஆறுகளையும் உள்ளடக்கிய ஒரே சட்டமன்ற தொகுதி பவானி தொகுதிதான். ஒரு ஆற்றின் பெயர் நகரின் பெயராகவும் ஒரு தொகுதியின் பெயராகவும் அமைந்து உள்ளது.
பவானி மிகப்பெரிய ஆன்மிக சுற்றுலா தலம். பவானி, காவிரி நதிகளுடன் கண்ணுக்கு புலப்படாத அமுதநதி கலக்கும் திரிவேணி சங்கமமாக, கூடுதுறையாக இது விளங்குகிறது. வடக்கில் உள்ள காசிக்கு ஒப்பான புண்ணியதலமாக பவானி விளங்குகிறது.
பவானி சங்கமேஸ்வரர் கோவில் மற்றும் அதை சுற்றி ஆயிரக்கணக்கான சிவலிங்கங்கள் மண்ணுக்கு அடியில் இருப்பதாகவும், பவானி மண் கூட சிவபெருமானின் திருநீறாக விளங்குகிறது என்பதும் ஆன்மிக ஐதீகத்தின் வெளிப்பாடாகும். இதை மெய்ப்பிக்கும் விதமாக ஆண்டுதோறும் செல்லியாண்டியம்மன் கோவில் திருவிழா அம்மை அழைத்தல் நிகழ்ச்சியின்போது பக்தர்கள் மண்ணில் புரண்டு, சேற்றை அள்ளி உடலில் பூசும் வழிபாடு நடந்து வருவதை காணலாம்.
இதுமட்டுமா...பவானி ஜமுக்காளம் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. பவானி மற்றும் சுற்றுப்புறங்களில் நெசவாளர்கள் கைத்தறியில் உற்பத்தி செய்த ஜமுக்காளங்களின் தரத்தை விஞ்ச முடியாது. நெசவும், விவசாயமும் பவானி தொகுதியின் முக்கிய தொழில்கள். பவானி நகரைதாண்டி பார்த்தால் முற்றிலும் கிராமங்களை கொண்ட ஒரு தொகுதி பவானி.
பவானி நகராட்சி மட்டுமே சற்று வளர்ச்சி அடைந்த நகராக இருக்கிறது. பிற பகுதிகளில் கவுந்தப்பாடி, ஆப்பக்கூடல் ஆகியவை சற்று நகரின் வளர்ச்சியை பெற்று இருக்கும். பிற பகுதிகள் முழுமையாக கிராமங்களை கொண்டவை. அதிக அளவில் கூலித்தொழிலாளர்களை கொண்ட தொகுதி. கீழ்பவானி பாசனம், மேட்டூர் வலதுகரை பாசனங்கள், கிணற்று பாசனங்களை அதிகம் கொண்ட தொகுதி. கடந்த வறட்சி காலத்தில் ஈரோடு மாவட்டத்தில் அதிகம் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் பவானி தொகுதியும் ஒன்று.
பவானியில் ஜமுக்காள உற்பத்தி நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே வருகிறது. கைத்தறிகள் பழைய மரத்துண்டுகளாக, விறகுகளாக மாறிக்கொண்டு வருகின்றன. காலத்தின் தேவைக்கு ஏற்ப தொழில் நுட்ப மாற்றங்கள் கொண்டு வரப்படாமல் இந்த தொழில் அழிவு நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது. இதை மீட்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. பவானியில் ஜமுக்காள தொழில் நுட்ப கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கை, கோரிக்கையாகவே உள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது பள்ளிப்படிப்பை முடித்த பகுதியாக பவானி உள்ளது. காவிரியை கடந்தால் எனது ஊர் வந்து விடும் என்று அவரே பொதுமக்கள் மத்தியில் பேசி, அவரது சொந்த ஊர்போல பவானியை பாவிப்பதாக கூறுவார்.
ஆனால், வளர்ச்சி மட்டும் சற்றும் அதிகரிக்காமல் இருக்கிறது. ஈரோட்டுக்கு அடுத்தபடியாக சாய ஆலைகள் அதிகம் கொண்ட பகுதியாக பவானி காடப்பநல்லூர் பகுதி இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை குடிசைத்தொழில் போன்று சாய-சலவை வேலைகள் செய்யப்பட்டு வந்தன. இந்த கழிவு நீர் முழுவதும் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்பட்டதால் நிலத்தடி நீர், பவானி ஆறு உள்ளிட்டவை பாதிக்கப்பட்டன. எனவே அதை தவிர்க்க பட்டறைகள் மூடப்பட்டன. மாற்று ஏற்பாடாக தொழிலை மேம்படுத்தவும், தொழிலை காப்பாற்றவும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பவானி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன். இவர் ஏற்கனவே 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை பவானி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர். 2011-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று பவானி நகர்மன்ற தலைவராகவும் இருந்தார். 2016-ம் ஆண்டு மீண்டும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
பவானி கூடுதுறையில் அமாவாசை தினங்களில் குவியும் பக்தர்கள் கழிவாக போட்டுச்செல்லும் ஆடைகளை அகற்றி, கூடுதுறையை சுத்தம் செய்யும் நடவடிக்கை கூட வெற்றிகரமாக செய்ய முடியவில்லை.
பவானி தொகுதியில் உள்ள சில பகுதிகளுக்கு ஈரோடு மாநகராட்சிக்கான தனி குடிநீர் திட்டமான ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அந்த அளவுக்கு பவானி தொகுதியில் சில பகுதிகளில் இன்னும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது.
பல்வேறு புதிய திட்டங்கள் நிறைவேற்றம், பல்வேறு புதிய கோரிக்கைகள் என்ற தேவைகள் அடிப்படையில் பவானி மக்கள் இந்த தேர்தலை சந்திக்க உள்ளனர். தற்போதைய வாக்காளர் பட்டியலின்படி பவானி சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 531 பேர் உள்ளனர். அமைச்சர் தொகுதி என்பதால் நட்சத்திர அந்தஸ்து பெற்று உள்ளது பவானி தொகுதி. ஏற்கனவே இந்த தொகுதியில் 1991-ம் ஆண்டு சு.முத்துசாமி அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்று சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். இதன் மூலம் 2 முறை அமைச்சர்களின் தொகுதியாக பவானி இருந்து உள்ளது.
1952-ம் ஆண்டு முதல் பவானி சட்டமன்ற தொகுதி தனித்து இயங்கி வருகிறது. 1957-ம் ஆண்டு இந்த தொகுதி இரட்டை உறுப்பினர்கள் தொகுதியாக இருந்தது.
யார் இங்கு வெற்றி பெற்றாலும் பவானி தொகுதியின் தேவைகளை சமரசம் இன்றி நிறைவேற்றுபவராக இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.