உப்பிலியபுரம் அருகே தேர்தலை புறக்கணிப்பதாக கூறி கருப்பு கொடியுடன் கிராம மக்கள் ஊர்வலம்
உப்பிலியபுரம் அருகே தேர்தலை புறக்கணிப்பதாக கூறி கருப்பு கொடியுடன் கிராம மக்கள் ஊர்வலம் சென்றனர்.;
உப்பிலியபுரம்,
பச்சபெருமாள்பட்டி ஊராட்சியை சேர்ந்த நெட்டவேலம்பட்டியில் விவசாயத்தையும், கால்நடைகளையும் பிரதான தொழிலாக கொண்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள், மழைகாலங்களில் புளியஞ்சோலையிலிருந்து செல்லும் உபரிநீரை, கால்வாய் அமைத்து நெட்டவேலம்பட்டி ஏரி மற்றும் சுற்றியுள்ள குளங்களுக்கு நீர் ஆதாரமான பாசன வசதி வழி செய்ய கோரிக்கை வைத்தனர். 2016-ம் ஆண்டு முதல் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, தலைமைச்செயலகம், பொதுப்பணித்துறை தலைமைப்பொறியாளர் ஆகியோருக்கு பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் விரக்தி அடைந்த கிராமமக்கள் நேற்று ஒன்று திரண்டு நடைபெற உள்ள தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்தனர். அத்துடன் பொதுமக்களின் நலனை உதாசீனப்படுத்துவதாகவும், கோரிக்கைகள் கிடப்பில் போடுவதை கண்டித்தும் அவர்கள் கருப்பு கொடி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இதில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.