உரிய ஆவணங்கள் இல்லாததால் 3 வியாபாரிகளிடம் ரூ.4.80 லட்சம் பறிமுதல்
உரிய ஆவணங்கள் இல்லாததால் 3 வியாபாரிகளிடம் இருந்து ரூ.4 லட்சத்து 80 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.
திருவெறும்பூர், மார்ச்.10-
உரிய ஆவணங்கள் இல்லாததால் 3 வியாபாரிகளிடம் இருந்து ரூ.4 லட்சத்து 80 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.
பறக்கும்படை சோதனை
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை கொடுப்பதை தடுக்க பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வாகன சோதனை மேற்கொண்டு பணம், பரிசு பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
அதன்படி, திருவெறும்பூர் அருகே துவாக்குடி சுங்கச்சாவடி பகுதியில் நேற்று தேர்தல் தனி தாசில்தார் அசோக்குமார் தலைமையிலான பறக்கும்படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையை சேர்ந்த காய்கறி வியாபாரி காந்திநாதன் என்பவரின் காரை சோதனை செய்த போது, அவர், காய்கறி வாங்குவதற்காக ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 500 எடுத்துச்செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரூ.4.80 லட்சம் பறிமுதல்
இதுபோல் கண்காணிப்புக்குழு அதிகாரி சங்கீதா தலைமையிலான குழுவினர், தஞ்சையில் இருந்து திருச்சிக்கு முட்டை ஏற்றி வந்த லாரியை சோதனை செய்தனர். அப்போது, அதில் இருந்த நாமக்கல்லை சேர்ந்த முட்டை வியாபாரி சங்கர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்தை எடுத்துச்செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர், 2 வியாபாரிகளிடம் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 லட்சத்து 82 ஆயிரத்து 500 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியான தாசில்தார் செல்வகணேஷிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுபோல் முசிறி தொகுதி பறக்கும் படையினர் தா.பேட்டை பகுதியில் சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது தா.பேட்டையை அடுத்த தேவனூர் கிராமத்தை சேர்ந்த பாலாஜி (வயது 29) என்பவர் நாமக்கல் பகுதியில் சந்தையில் தனது மாடுகளை விற்று ரூ.98 ஆயிரம் வைத்திருந்தார். ஆனால் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை முசிறி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
103 சேலைகள் பறிமுதல்
இதேபோல் திருச்சி அரியமங்கலம் ஆயில்மில் சோதனைச்சாவடியில் துணை ராணுவ படை உதவியுடன் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை சேர்ந்த முருகன் என்பவரின் காரை சோதனை செய்தனர். சோதனையில் காரில், 103 சேலைகள் இருந்தன.
அவரிடம் நடத்திய விசாரணையில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களுக்கு சேலைகளை மாதிரி காட்டுவதற்காக எடுத்துச் சென்றதாக தெரிவித்தார். ஆனால் உரிய ஆவணங்கள் இன்றி சேலைகளை எடுத்து சென்றதால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.