பத்ரகாளியம்மன் கோவில் தூக்க திருவிழா தொடங்கியது
கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவில் தூக்க திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
கொல்லங்கோடு:
கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவில் தூக்க திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
கோவில் திருவிழா
தென் தமிழகத்தின் முக்கிய திருவிழாவான கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவில் மீனபரணி தூக்க திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையொட்டி நேற்று அதிகாலை வழக்கமான பூஜைகள் முடிந்து மேளதாளத்துடன் திருவிழா கோவிலுக்கு கொடிமரம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து காலை 8 மணிக்கு மூலக்கோவிலிருந்து அம்மன் எழுந்தருளி புறக்கால் கிணறு வலம் வந்து பூஜைகளுக்கு பிறகு திரும்ப கோவிலை வந்தடைந்தது.
கொடியேற்றம்
பின்னர் மாலை 5 மணியளவில் மேளதாளம் முழங்க அம்மன் மூலக் கோவிலில் இருந்து எழுந்தருளி கண்ணனாகம் சந்திப்பு வழியாக கோவிலை வந்தடைந்தது. இரவில் வாணவேடிக்கை முழங்க பெண்கள் குலவையிட கோவில் தந்திரி பிரம்ம ஸ்ரீ கொட்டாரக்கரை நீர்மனை ஈஸ்வரன் போற்றி தலைமையில் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை வருகிற 18-ந் தேதி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் சதாசிவன் நாயர், செயலாளர் மோகன் குமார், பொருளாளர் சூரிய தேவன் தம்பி, துணைத் தலைவர் பிரேம்குமார், துணைச் செயலாளர் பிஜு குமார், கமிட்டி உறுப்பினர்கள் விலோசனன், கிருஷ்ணகுமார், சந்திரசேகரன், சாம்பசிவன் நாயர், விஜயகுமார், சுசீந்திரன் நாயர் ஆகியோர் செய்திருந்தனர்.