முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காரைக்குடி,
முத்துமாரியம்மன்
காரைக்குடி மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த ேகாவிலில் மாசி, பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒரு மாதத்திற்கு மேலாக நடக்கும் இத்திருவிழாவில் பங்கேற்பதற்காக இப்பகுதியை சேர்ந்தவர்கள் உலகின் எப்பகுதியில் இருந்தாலும் வந்துவிடுவார்கள்.
இந்த விழாவையொட்டி நேற்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூைஜகள் நடைபெற்றது. பின்னர் கொடி மர பூஜை நடந்தது.
பிறகு சிறப்பு தீபாராதனை நடைபெற்று காலை 6.05 மணிக்கு கொடியேற்றப்பட்டது. 6.15 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது. பின் அம்மனை வழிபட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டிக் கொண்டனர்.
பால்குடம்
ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெறும் இத்திருவிழாவில் பால்குடம், முளைப்பாரி, தீ மிதித்தல், காவடி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் மிகச் சிறப்புடையதாகும். வீட்டுக்கு ஒருவராவது பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். லட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு பால்குடம் எடுப்பது வேறு எங்கும் காண இயலாத தனிச்சிறப்பாகும்.
அன்றையதினம் காரைக்குடி நகரமே பால் மணம் கமழும். பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து விரதமிருந்து வருவதால் காரைக்குடி நகரமே மஞ்சள் மயமாக உள்ளது. விழாவினையொட்டி தினமும் இன்னிசை கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.