கொடைக்கானலில் களைகட்டிய சுற்றுலா இடங்கள்

வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் சுற்றுலா இடங்கள் களைகட்டின.;

Update:2021-03-08 01:26 IST
கொடைக்கானல்: 

சுற்றுலா பயணிகள் வருகை
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி வருகை தருகின்றனர். 

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. 

வார விடுமுறைதினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகாலை முதலே கொடைக்கானலுக்கு வரத் தொடங்கினர். 

அவ்வாறு ஏராளமான சுற்றுலா வாகனங்கள் கொடைக்கானலுக்கு படையெடுத்ததால் நகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து  போலீசார், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். 

 களைகட்டிய சுற்றுலா இடங்கள்
குறிப்பாக கேரள மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்தனர். 

சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்ததால் கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களும் களைகட்டின. 

ஏரிச்சாலை, பிரையண்ட் பூங்கா, பசுமை பள்ளத்தாக்கு, பில்லர் ராக், பைன்மரக்காடு, குணா குகை உள்ளிட்ட சுற்றுலா இடங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு பொழுதுபோக்கினர். 

மேலும் நட்சத்திர ஏரியில் படகுசவாரி செய்தும், ஏரிச்   சாலையில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

 சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் அவ்வப்போது வெண்மேக கூட்டங்கள் தரம் இறங்கியது கண்களை கொள்ளை கொள்வதாக இருந்தது.
அதிக அளவு சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நேற்று கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களும் நிரம்பி வழிந்தன. 

இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

மேலும் செய்திகள்