விழுப்புரம் தொகுதி கண்ணோட்டம்
விழுப்புரம் தொகுதி கண்ணோட்டம் குறித்து கீழே காண்போம்.
விழுப்புரம்,
தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து கடந்த 30.9.1993 அன்று விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக தோற்றுவிக்கப்பட்டது. அப்போது விழுப்புரம், செஞ்சி, ரிஷிவந்தியம், முகையூர், வானூர், திண்டிவனம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, சின்னசேலம், கண்டமங்கலம், மேல்மலையனூர், திருநாவலூர் ஆகிய 12 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கியதாக மாவட்டம் பிரிக்கப்பட்டது.
தொகுதிகள் மறு சீரமைப்பிற்கு பின்னர் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, செஞ்சி, திருக்கோவிலூர், திண்டிவனம், மயிலம், வானூர், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய 11 சட்டமன்ற தொகுதிகளாக உருவானது.
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் (தனி), வானூர் (தனி), செஞ்சி, மயிலம், திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
அமைச்சர் தொகுதி
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைச்சர் தொகுதி என்ற வி.ஐ.பி. அந்தஸ்தை பெற்றது விழுப்புரம் சட்டமன்ற தொகுதி.
மாவட்டத்தின் தலைநகரை உள்ளடக்கிய இந்த தொகுதியில் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட 42 வார்டு பகுதிகள், வளவனூர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டு பகுதிகள், கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 45 ஊராட்சி பகுதிகளும், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 15 ஊராட்சி பகுதிகளும், காணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 6 ஊராட்சி பகுதிகளும் இடம்பெற்றுள்ளது.
இந்த தொகுதியில் வன்னியர்கள், ஆதிதிராவிடர்கள் அதிகமாக வசிக்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக உடையார், நாயுடு, ரெட்டியார், செட்டியார் மக்களும் அதிகம் வசிக்கும் தொகுதியாக உள்ளது. அதுபோல் முஸ்லிம்கள், கிறிஸ்தவ மக்களும் பரவலாக வசிக்கின்றனர்.
அமைச்சர் சி.வி.சண்முகம் 3-வது முறையாக போட்டி
இத்தொகுதியில் ஏற்கனவே தொடர்ந்து 2 முறை அ.தி.மு.க. வேட்பாளரான சி.வி.சண்முகம் வெற்றி பெற்றுள்ளதால் தற்போது நடைபெற உள்ள தேர்தலிலும் ஹாட்ரிக் வெற்றி பெற்று தொகுதியை அ.தி.மு.க. வசம் தக்க வைக்கும் முனைப்பில் அமைச்சர் சி.வி.சண்முகமே மீண்டும் 3-வது முறையாக வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். அதேபோல் தி.மு.க. சார்பில் முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ் மற்றும் அ.தி.மு.க.வில் மாவட்ட செயலாளராக இருந்து அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்து தற்போது மாநில மருத்துவ அணி இணை செயலாளராக உள்ள முன்னாள் எம்.பி. டாக்டர் லட்சுமணன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு விழுப்புரம் தொகுதியில் 2 லட்சத்து 46 ஆயிரத்து 268 வாக்காளர்கள் இருந்தனர். கடந்த 5 ஆண்டுகளில் புதிய வாக்காளர்கள் மற்றும் இடம்பெயர்ந்து வந்தவர்கள் என 14 ஆயிரத்து 702 பேர் அதிகரித்துள்ளனர்.
நிறைவேற்றம்- எதிர்பார்ப்பு
இந்த தொகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக இருக்கிறது. மேலும் இந்த தொகுதியில் அரசு சட்டக்கல்லூரி, அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி, அரசு கல்வியியல் கல்லூரி, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம், பல ஆண்டுகளாக கேட்பாரற்று குப்பை மேடாக காட்சியளித்த பூந்தோட்டம் குளம் நவீன வசதிகளுடன் சீரமைப்பு, நகராட்சிக்கு புதிய கட்டிடம், தளவானூர் தென்பெண்ணையாற்றில் தடுப்பணை மற்றும் வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு 90 சதவீதத்திற்கு மேல் பட்டா வழங்கியது உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும், திட்டங்களையும் அ.தி.மு.க. அரசு செய்து கொடுத்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அதே சமயத்தில் படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய வகையில் ஒரு சிறு தொழிற்சாலைகள் கூட அமைக்கப்படவில்லை. அதுபோல் விழுப்புரத்தில் மீன் மார்க்கெட் அமைக்க வேண்டும் என்பது இங்குள்ள மக்களின் பல ஆண்டு கால கோரிக்கை. கடந்த தேர்தலின்போதே இதுபற்றி வலியுறுத்தப்பட்டது. ஆனால் ஆட்சி முடியப்போகிற கடைசி நேரத்தில் சில மாதங்களுக்கு முன்புதான் மீன் மார்க்கெட் அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளனர், அதேபோல்தான் விழுப்புரம் நகரில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் இன்னும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படவில்லை, காய்கறி மார்க்கெட்டுக்கென்று சொந்த கட்டிடம் கட்டித்தரப்படவில்லை.
நகரில் சுற்றுச்சாலை (ரிங் ரோடு) அமைக்க நடவடிக்கை எடுக்காததால் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உள்ளது. திருக்கோவிலூரில் இருந்து சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக இந்திரா நகர் மேம்பாலத்தில் இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. விவசாயம் நிறைந்த தொகுதியான இங்கு விவசாய தொழில் சார்ந்த தொழிற்சாலைகளும் இல்லை. வளவனூரில் புறவழிச்சாலை அமைக்கப்படுவதாக இருந்தது, அதுவும் நிறைவேற்றப்படாமல் கிடப்பிலேயே உள்ளது. சிறுவந்தாடு, மோட்சகுளம் பகுதியில் பட்டு சேலைகள் அதிகளவில் நெசவு செய்யப்படுவதால் அத்தொழிலை மேம்படுத்த ஜவுளிப்பூங்கா அமைக்க வேண்டும் என்பதும் விழுப்புரம் தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
........
பயோடேட்டா
மொத்த வாக்காளர்கள்- 2,60,970
ஆண்கள்- 1,27,445
பெண்கள்- 1,33,463
மூன்றாம் பாலினம் - 62
............
2016 தேர்தல் வாக்கு விவரம்
மொத்த வாக்குகள் - 2,46,268
பதிவான வாக்குகள்- 1,88,964
சி.வி.சண்முகம் (அ.தி.மு.க.) - 69,421
எஸ்.அமீர்அப்பாஸ் (இ.யூ.மு.லீக்) - 47,130
பழனிவேல் (பா.ம.க.) - 36,456
.............
இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள்
விழுப்புரம் தொகுதியானது 1952-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையில் 15 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதுவரை நடந்த தேர்தல்களில் தி.மு.க. 8 முறையும், அ.தி.மு.க. 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
2021-ம் ஆண்டிற்கான சட்டமன்ற பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற இருக்கின்ற வேளையில் விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் இதுவரை நடைபெற்று முடிந்த தேர்தல் நிகழ்வினை நினைவில் காண்போம்...
1952- காங்கிரஸ் வெற்றி
நாகராஜன்........................ (காங்கிரஸ்)
சண்முக உடையார்.... உழவர் உழைப்பாளர் கட்சி
1957- காங்கிரஸ் வெற்றி
சாரங்கபாணி (காங்கிரஸ்) - 25,000
சண்முக உடையாளர் (தி.மு.க.) - 24,147
1962- தி.மு.க. வெற்றி
சண்முக உடையார் (தி.மு.க.) - 39,923
சாரங்கபாணி (காங்கிரஸ்) - 26,115
1967- தி.மு.க. வெற்றி
சண்முக உடையார் (தி.மு.க.) - 37,605
சாரங்கபாணி (காங்கிரஸ்) - 31,674
1971- தி.மு.க. வெற்றி
சண்முக உடையார் (தி.மு.க.) - 35,838
சாரங்கபாணி (காங்கிரஸ்) - 28,562
1977- அ.தி.மு.க. வெற்றி
கிருஷ்ணன் (அ.தி.மு.க.) - 27,882
பழனியப்பன் (தி.மு.க.) - 25,183
1980- தி.மு.க. வெற்றி
பழனியப்பன் (தி.மு.க.) - 45,952
ராஜரத்தினம் என்கிற மணி (அ.தி.மு.க.) - 40,792
1984- அ.தி.மு.க. வெற்றி
ராஜரத்தினம் என்கிற மணி (அ.தி.மு.க.) - 50,516
பழனியப்பன் (தி.மு.க.) - 36,302
1989- தி.மு.க. வெற்றி
பொன்முடி (தி.மு.க.) - 45,145
அப்துல்லத்தீப் (காங்கிரஸ்) - 22,380
1991- அ.தி.மு.க. வெற்றி
ஜனார்த்தனன் (அ.தி.மு.க.) - 55,105
பொன்முடி (தி.மு.க.) - 37,665
1996- தி.மு.க. வெற்றி
பொன்முடி (தி.மு.க.) - 74,891
பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.) - 33,305
2001- தி.மு.க. வெற்றி
பொன்முடி (தி.மு.க.) - 65,693
பசுபதி (பா.ம.க.) - 63,488
2006- தி.மு.க. வெற்றி
பொன்முடி (தி.மு.க.) - 72,462
பசுபதி (அ.தி.மு.க.) - 62,714
2011- அ.தி.மு.க. வெற்றி
சி.வி.சண்முகம் (அ.தி.மு.க.) - 90,304
பொன்முடி (தி.மு.க.) - 78,207
2016- அ.தி.மு.க. வெற்றி
சி.வி.சண்முகம் (அ.தி.மு.க.) - 69,421
அமீர்அப்பாஸ் (இ.யூ.மு.லீக்) - 47,130