நெல்லிக்குப்பம் அருகே தென்பெண்ணையாற்று கரையில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு அபராதம்
தென்பெண்ணையாற்றங்கரையில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நெல்லிக்குப்பம்,
கடலூா் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் தென்பெண்ணையாறு கரை மற்றும் கரையோரம் உள்ள விவசாய நிலங்களில் சிலர் நள்ளிரவு நேரத்தில் மூட்டை மூட்டையாக பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டிச் சென்றனர்.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விளை நிலங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறதா? என கண்காணித்தனர். அப்போது நேற்று அதிகாலை மினிலாரியில் வந்தவர்கள் 25-க்கும் மேற்பட்ட சாக்கு மூட்டைகளில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை தென்பெண்ணையாற்று கரை மற்றும் அதன் அருகே உள்ள விளை நிலங்களில் வீச முயன்றனர்.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயிகள் விரைந்து வந்து மினிலாரியில் வந்தவர்களை மடக்கி பிடித்து மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
அபராதம் விதிப்பு
அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் சரவணவேல் கழிவு பொருட்களுடன் மினிலாரியில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில். அவர்கள் கடலூரில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனிகளில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை மூட்டைகளாக கட்டி கொண்டு வந்து வீசி விட்டு செல்வது தெரியவந்தது.
இதையடுத்து பொதுஇடம் மற்றும் விளை நிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களை வீசிய நபர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, இனிமேல் விளை நிலத்தில் கழிவுகளை கொட்டினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து, அவர்களை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.