முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தபால் மூலம் ஓட்டு போடலாம்; கலெக்டர் கதிரவன் தகவல்
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தபால் மூலம் ஓட்டு போடலாம் என்று கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தபால் மூலம் ஓட்டு போடலாம் என்று கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.
தபால் ஓட்டு
ஈரோடு மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஓட்டுச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிப்பு உள்ளதாக சந்தேகப்படும் வாக்காளர்கள் தங்களது ஓட்டுகளை தபால் மூலம் செலுத்தலாம்.
இதற்காக, சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியின் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கோவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிப்பு உள்ளதாக சந்தேகப்படும் வாக்காளர்களுக்கு வருகிற 12-ந்தேதிக்கு முன் இதற்கான படிவம் ‘12டி’ வழங்குவார்கள். சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் வீட்டில் இல்லையெனில், 2-வது முறை நேரில் வந்து வழங்குவார்கள்.
சான்றிதழ்
மேற்படி, ‘12டி’ படிவத்தை போதிய விவரங்களுடன் பூர்த்தி செய்து வருகிற 12-ந்தேதி முதல் 16-ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களது வீடுகளுக்கு வந்து பெற்றுக்கொள்வார்கள். படிவங்களை பெற சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் வீட்டுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர் நேரில் செல்லும்போது, அவர் அங்கு இல்லை என்றால் 5 நாட்களுக்குள் இருமுறை வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர்கள் வீட்டுக்கு சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை பெற்று வர வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை, அவர்கள் மாற்றுத்திறனாளிகள் தான் என்பதற்கு தகுந்த அரசு சான்றிதழ் நகலினை வழங்க வேண்டும். கோவிட் தொற்று உள்ளவர்கள், சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், சுகாதார அலுவலரிடம் இருந்து பெற்ற சான்றிதழை வழங்க வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரி, சம்பந்தப்பட்ட அனைத்து படிவங்களையும் குறிப்பிட்ட காலத்துக்குள் பெற்று பூர்த்தி செய்த ‘12டி’ படிவங்களை சரிபார்த்து தபால் ஓட்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்வார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.