உடுமலை சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதி உள்ளதா? ஆய்வு செய்ய மண்டல அலுவலர்களுக்கு ஆர்.டி.ஓ. உத்தரவு
உடுமலை சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதி உள்ளதா ஆய்வு செய்ய மண்டல அலுவலர்களுக்கு ஆர்.டி.ஓ. உத்தரவு
உடுமலை:
உடுமலை சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதி உள்ளதா? என்று ஆய்வு செய்ய மண்டல அலுவலர்களுக்கு ஆர்.டி.ஓ. உத்தரவிட்டுள்ளார்.
மண்டல அலுவலர்கள்
உடுமலை சட்டமன்றத்தொகுதியில், தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன.
இதற்காக தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட உள்ள அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. உடுமலை சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 293 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தொகுதி 37 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு மண்டல அலுவலர், ஒரு உதவி மண்டல அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கூடுதலாக 4மண்டல அலுவலர்கள், 4 உதவி மண்டல அலுவலர்கள் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.
அறிமுக கூட்டம்
இதைத்தொடர்ந்து மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்ற அறிமுக கூட்டம் உடுமலை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தை உடுமலை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்.டி.ஓ.கீதா தலைமை தாங்கி நடத்தினார். தாசில்தார் வி.ராமலிங்கம், ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் விவேகானந்தன், தேர்தல் துணை தாசில்தார் கே.கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் பேசினர்.
கூட்டத்தில் மண்டல அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக வாக்குச்சாவடிகளில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் உள்ளதா? என்று பார்வையிட அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி வாக்குச்சாவடிகளில் கதவு, ஜன்னல் சரியாக உள்ளதா?, சாய்வு தளம் உள்ளதா?, குடிநீர் வசதி, விளக்கு வசதி, கழிப்பிட வசதி ஆகியவை உள்ளதா? என்று பார்வையிட்டு 3 நாட்களில் அறிக்கை தரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.