திருமணம் செய்து வைப்பதாக கூறி நிதிநிறுவன உரிமையாளரிடம் ரூ.1¼ கோடி, 45 பவுன் நகைகள் மோசடி
திருமணம் செய்து வைப்பதாக கூறி நிதி நிறுவன உரிமையாளரிடம் ரூ.1¼ கோடி மற்றும் 45 பவுன் நகை மோசடி செய்த வழக்கில் தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்:
திருமணம் செய்து வைப்பதாக கூறி நிதி நிறுவன உரிமையாளரிடம் ரூ.1¼ கோடி மற்றும் 45 பவுன் நகை மோசடி செய்த வழக்கில் தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நிதிநிறுவன உரிமையாளர்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா கூவக்காபட்டியை அடுத்துள்ள முத்துபழனியூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 29). இவர், குஜராத்தில் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். அதில் கிடைக்கும் லாப தொகையை தனது வங்கி கணக்கில் சேமிக்க முடிவு செய்தார். அதை தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த அறிவழகனிடம் (35) தெரிவித்தார்.
அப்போது பணத்தை ஒரே வங்கி கணக்கில் செலுத்த வேண்டாம் என்றும், 4 அல்லது 5 வங்கி கணக்குகளில் சேமிப்பது நல்லது என்று அவர் தெரிவித்துள்ளார். அதன்படி பாலசுப்பிரமணியன் பெயரில் 2 வங்கி கணக்குகள், அறிவழகன், அவருடைய மனைவி கலைச்செல்வி, மற்றொரு நண்பர் முருகன் ஆகியோரின் பெயரில் தலா ஒரு வங்கி கணக்கு தொடங்கப்பட்டது.
பாலசுப்பிரமணியனின் ஏ.டி.எம். கார்டுகளை அறிவழகன் வாங்கி வைத்து கொண்டதாக கூறப்படுகிறது.
நகை, பணம் மோசடி
இதையடுத்து பாலசுப்பிரமணியன் அந்த வங்கி கணக்குகளில் பணம் செலுத்தி வந்தார். அதை கொண்டு நிலம் வாங்கியதோடு, பணம் கொடுக்கல்- வாங்கல் தொழிலையும் அறிவழகன் செய்துள்ளார்.
இதற்கிடையே தனது தந்தை இறந்து விட்டதால், ஊருக்கு வந்த பாலசுப்பிரமணியன் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அப்போது கலைச்செல்வியின் தங்கை முத்துலட்சுமியை திருமணம் செய்யலாம் என்று அறிவழகன் கூறியிருக்கிறார்.
மேலும் ஓராண்டு கழித்து திருமணத்தை நடத்தலாம் என்றும் தெரிவித்தாராம். இதனால் பாலசுப்பிரமணியன் தொழிலை கவனிக்க சென்று விட்டார். இந்தநிலையில் திருமணத்துக்காக முத்துலட்சுமிக்கு 45 பவுன் நகைகள் வாங்கி கொடுக்கப்பட்டது. ஆனால், திடீரென முத்துலெட்சுமியை திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வங்கி கணக்குகள் மூலம் தான் அனுப்பிய ரூ.1 கோடியே 27 லட்சம் மற்றும் 45 பவுன் நகைகளை திரும்ப தரும்படி அவர் கேட்டுள்ளார். அவற்றை திரும்ப கொடுக்க மறுத்ததால் மனமுடைந்த பாலசுப்பிரமணியன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
3 பேர் கைது
அதுதொடர்பாக திண்டுக்கல் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார். அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு, கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவிட்டார்.
அதன்பேரில்மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையில், இன்ஸ்பெக்டர் சத்யா, சப்-இன்ஸ்பெக்டர் சேகர்பவுல்ராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, அறிவழகன், கலைச்செல்வி, முத்துலெட்சுமி, அவருடைய தந்தை அரிச்சந்திரன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் அறிவழகன், கலைச்செல்வி, முத்துலட்சுமி ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.