கடலூரில் ரூ.4¼ லட்சம் பறிமுதல்- தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
கடலூரில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4¼ லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடலூர்,
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று கடலூர் சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அதிகாரியும், தாசில்தாருமான விஜயா தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் முதுநகர் பச்சையாங்குப்பம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
பறிமுதல்
அப்போது காரில் வந்த 3 பேரிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தி, அவர்களை சோதனை செய்தனர். சோதனையில், அவர்கள் ரூ.4¼ லட்சம் வைத்திருந்தனர். இது பற்றி அவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த செல்வராஜ். பார்த்திபன், பிரதீப் என்று தெரிந்தது.
அவர்கள், சிதம்பரத்தில் பிடிப்பட்ட லாரிகளுக்கு அபராதம் கட்டுவதற்காக செல்வதாக கூறினர்.ஆனால் பணத்திற்கான உரிய ஆவணம் ஏதும் அவர்களிடம் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, கடலூர் தாசில்தார் பலராமனிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.