நெல்லையில் துணை ராணுவப்படை- போலீஸ் அணிவகுப்பு

நெல்லையில் துணை ராணுவப்படை, போலீஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

Update: 2021-03-03 20:10 GMT
நெல்லை, மார்ச்:
நெல்லையில் துணை ராணுவப்படை, போலீஸ் அணிவகுப்பு நடைபெற்றது.

போலீஸ் அணிவகுப்பு

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் பாதுகாப்புக்கு மத்திய பாதுகாப்பு படை மற்றும் துணை ராணுவம் தமிழகத்திற்கு வந்துள்ளது. நெல்லைக்கு துணை ராணுவ படையினர் வந்துள்ளனர். இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்பதை மக்களுக்கு விளக்கும் வகையில் போலீஸ், துணை ராணுவப்படையினர் அணிவகுப்பு நேற்று நெல்லை டவுனில் நடந்தது.

நெல்லை டவுன் ஆர்ச் அருகே தொடங்கிய இந்த அணிவகுப்பு பேரணியை, நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். அணிவகுப்பு பேரணி நெல்லை டவுன் கீழரதவீதி, தெற்குரதவீதி, மேற்கு ரதவீதி, தொண்டர் சன்னதி, பாறையடி வரை  நடைபெற்றது. இதில் நெல்லை டவுன் உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார், ஆயுதப்படை உதவி போலீஸ் கமிஷனர் முத்தரசு, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி மற்றும் போலீசார் பங்குபெற்றனர்.

சேரன்மாதேவி

சேரன்மாதேவி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சேரன்மாதேவி உதவி போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் தலைமையில் போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பானது, சேரன்மாதேவி பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு காந்தி பார்க், ராமர் கோவில் வரை சென்று மீண்டும் பஸ் நிலையம் வழியாக, பழைய பஸ் நிலையம் பகுதியில் நிறைவடைந்தது.

இதேபோல் வீரவநல்லூரில் போலீசாரின் அணிவகுப்பு பஸ் நிலையம் பகுதியில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பஸ் நிலையம் பகுதியில் முடிவடைந்தது. இந்த கொடி அணிவகுப்பில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சேரன்மகாதேவி சுகாதேவி, வீரவநல்லூர் ராஜ் மற்றும் போலீசார், மத்திய பாதுகாப்பு படையினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்