தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த விளக்க கூட்டம்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-03-03 19:15 GMT
கரூர்
விளக்க கூட்டம்
உணவகங்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள், ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த விளக்க கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மலர்விழி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்ததாவது:- உணவகங்களுடன் இணைந்த தங்கும் விடுதிகளில் தங்குவோரின் விவரங்கள், சரியான பெயர், முகவரி, அலைபேசி எண், ஆதார் அட்டை நகல் மற்றும் தங்குவதற்கான சரியான காரணம் ஆகியவற்றினை கேட்டறிந்து அவற்றை தவறாமல் பதிவேட்டில் பதிய வேண்டும். 
 உள்ளூர் நபர்கள் அறைகளை பதிவு செய்தால், யாருக்காக பதிவு செய்யப்படுகிறது என்ற விவரத்தினையும், தங்குபவர் பற்றிய விவரங்களையும் அவரது வருகைக்கான காரணத்தையும் அறிந்து கொள்ளவேண்டும். உள்ளூர் நபர்கள் தங்கும்போது அவர்களிடம் சந்தேகத்திற்கிடமான வகையிலான பைகளோ, பொருட்களோ இருப்பது கண்டறியப்பட்டால் அது பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டும்.
பரிசு  வினியோகிக்க கூடாது
திருமணம், காதுகுத்து சமுதாயக்கூடங்கள் அல்லது பிற பெரிய மண்டபங்களில் சிறப்பு நிகழ்ச்சி என்ற பெயரில் பொதுமக்களைக்கூட்டி பரிசு பொருட்கள் ஏதும் வினியோகிக்கக் கூடாது. பணப்பட்டுவாடா செய்தல் போன்ற நிகழ்வுகள் ஏதும் தெரிய வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். திருமண மண்டபங்கள் உண்மையாகவே திருமண நிகழ்வுகளுக்காக பதிவு செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொண்டு அதற்கான முழுப்பொறுப்பினையும் மண்டப உரிமையாளரே ஏற்றுக்கொள்ள வேண்டும். 
அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு திருமண மண்டபங்களை பதிவு செய்தால் அது பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டும். பிரசாரம் நிறைவடையும் நாளான வருகிற ஏப்ரல் மாதம் 4-ந்தேதி மாலை 5 மணிக்கு பின்னர் இதர மாவட்டத்தினை சேர்ந்த எந்த ஒரு அரசியல் பிரமுகரும், அரசியல் கட்சி தொண்டர்களும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த எந்தவொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் தங்கக்கூடாது.
இரவு நேரங்களில்..
அதேபோல ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள், ஜவுளிக்கடை உரிமையாளர்கள் அரசியல் கட்சியை சேர்ந்த எவரேனும் தங்களது கட்சியின் கரை பதித்த வேட்டிகள், துண்டுகள், மப்ளர்கள் போன்றவற்றை அதிகளவில் கொள்முதல் செய்வதற்காக கோரும்பட்சத்தில் அதன் முழு விவரத்தினையும் தவறாது தேர்தல் நடத்தும் அலுவலர் கவனத்திற்கு கொண்டு வருதல் வேண்டும். 
தங்களது நிறுவனம் தொடர்பாக அதிக அளவிலான பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது உரிய ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும். சந்தேகத்திற்கிடமான அல்லது சட்டவிரோதமான வெளிநாட்டுப் பணம், இந்திய பணத்தின் கள்ள நோட்டுக்கள் ஏதும் கண்டறியப்பட்டால் காவல்துறை மற்றும் வருமான வரி துறையினர் மூலம் சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்யப்படும். 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்