கரூரில் மாதிரி வாக்குப்பதிவு ஒத்திகை
கரூரில் நேற்று மின்னணு வாக்குப்பதிவுஎந்திரத்தின் பயன்பாடு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு ஒத்திகை நடைபெற்றது.
கரூர்
விழிப்புணர்வு
வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் எந்த ஒரு வாக்காளரும் விடுபடாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாதிரி வாக்குப்பதிவு ஒத்திகை நிகழ்ச்சி கரூர் பஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மலர்விழி தலைமை தாங்கினார். இதில் பஸ் நிலையத்தில் கூடியிருந்த வாக்காளர்களிடம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை அவர்களுக்கு மட்டும் தெரிவிக்கும் வகையில் அமைக்கப்படும் வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை எந்திரம் செயல்படும் விதம் குறித்தும் மாவட்ட தேர்தல் அலுவலர் விரிவாக எடுத்துரைத்தார். பின்னர், வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு செய்து, வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை எந்திரத்தில் சரியான தகவல் காட்டப்படுகின்றதா என்பதையும் பார்வையிட்டனர்.
நேர்மையாக வாக்களிக்க வேண்டும்
தொடர்ந்து அவர்களிடம் தேர்தல் அலுவலர் கூறியதாவது:- அனைவரும் நேர்மையாக வாக்களிக்க வேண்டும். பணத்திற்காகவோ, பொருட்களுக்காகவே தங்களுடைய வாக்கை விற்கக்கூடாது, நேர்மையான, வெளிப்படை தன்மையான தேர்தல் நடைபெற அனைவரும் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த மாதிரி வாக்குப்பதிவு ஒத்திகையானது இன்று (அதாவது நேற்று) கரூர் பஸ்நிலையத்தில் நடைபெற்றது போல கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர்ந்து நடத்தப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை எந்திரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது,
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், தேர்தல் நடத்தும் அலுவலர் (கரூர்) பாலசுப்பிரமணியன், நகராட்சி ஆணையர் சுதா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.