வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை-ரூ.1 லட்சம் திருட்டு

பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை-ரூ.1 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-03-03 19:12 GMT
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் புஷ்பராஜ். செங்கல் சூளை தொழிலாளி. இவருக்கு விஜயா (வயது 48) என்ற மனைவியும், சரவணன் என்ற மகனும், ரஞ்சிதா என்ற மகளும் உள்ளனர். சரவணன் வெளியூரில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். ரஞ்சிதாவுக்கு திருமணமாகி விட்டது.  இந்தநிலையில் நேற்று வழக்கம் போல் புஷ்பராஜ் வேலைக்கு சென்று விட்டார். விஜயா உடல்நலம் சரியில்லாததால் நேற்று மதியம் சிகிச்சை பெறுவதற்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் அவர் மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு விஜயா அதிர்ச்சியடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் திருட்டு போயிருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்