கொள்ளையடிக்க முயன்ற கிராம உதவியாளர் கைது
கீழக்கரை அருகே வீடு புகுந்து தாய்-மகனை கத்தியால் குத்தி நகையை கொள்ளையடிக்க முயன்ற கிராம உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.
கீழக்கரை, மார்ச்
கீழக்கரை அருகே வீடு புகுந்து தாய்-மகனை கத்தியால் குத்தி நகையை கொள்ளையடிக்க முயன்ற கிராம உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.
கிராம உதவியாளர்
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே உள்ள புல்லந்தை கிராமத்தை சேர்ந்தவர் சந்தானகுமார் (வயது 45) வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி வயது (43). இவர்களுக்கு காளீஸ்வரன் (18). சதீஸ்வரன் (வயது 10) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று முன் தினம் முத்துலட்சுமி மகளிர் மன்ற கூட்டத்துக்கு சென்றுவிட்ட நிலையில் சதீஸ்வரன் மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது சந்தானகுமாரின் உறவினரும், புல்லந்தை கிராம உதவியாளருமான சந்திரசேகர் வயது (32) முத்துலட்சுமியின் வீட்டுக்கு வந்துள்ளார்.
கத்திக்குத்து
அவர் சதீஸ்வரனிடம் பீரோ சாவியை கேட்டு மிரட்டியுள்ளார். சாவியை தர மறுத்து கூச்சலிட்ட சதீஸ்வரனை அவர் கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் பக்கத்தில் இருந்த அறையில் அவனை அடைத்துள்ளார்.அந்த நேரத்தில் முத்துலட்சுமி வீட்டுக்குள் வந்துள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட சந்திரசேகர் முத்துலட்சுமியை கழுத்துப் பகுதியில் கத்தியால் குத்தியுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் சந்திரசேகரை சுற்றி வளைத்து பிடித்து ஏர்வாடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும் படுகாயமடைந்த தாய், மகன் இருவரையும் ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து ஏர்வாடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
காரணம்
சந்திரசேகர் கீழக்கரையில் உள்ள தனியார் நகை கடன் நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்து பணம் வாங்கியுள்ளார். நகையை உடனடியாக திருப்பும் படி அந்த நிறுவனத்திடமிருந்து கடிதம் வந்துள்ளது.
பண நெருக்கடியில் இருந்த சந்திரசேகர் முத்துலட்சுமியின் வீட்டுக்குள் புகுந்து நகையைத் எடுப்பதற்கு முயற்சித்ததும், அதற்கு இடையூறாக இருந்த தாய், மகனை கத்தியால் குத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து ஏர்வாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிராம உதவியாளர் ஒருவரே தாய்-மகனை குத்தி நகை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.