பாகன்களுக்கு கீழ்ப்படிவதால் அரிசிராஜா யானை மரக்கூண்டில் இருந்து வெளியேற்றம்
பாகன்களுக்கு கீழ்ப்படிவதால் அரிசிராஜா யானை மரக் கூண்டில் இருந்து வெளியேற்றப்பட்டு முகாமில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி,
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இதில் வனப்பகுதியை விட்டு வெளியே வந்த காட்டு யானை கடந்த 2019-ம் ஆண்டில் 3 பேரை தாக்கி கொன்றது. இந்த யானை தாக்கியதில் வனத்துறை ஊழியர் உள்பட சிலரும் காயம் அடைந்தனர்.
இந்த யானையின் அட்டகாசம் அதிகரித்ததால் அதை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அரிசி ராஜா என்று அழைக்கப்பட்ட அந்த யானையை கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதி மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
பின்னர் அரிசி ராஜா யானை டாப்சிலிப் அருகே உள்ள வரகளியாறு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மரக்கூண்டில் (கரால்) அடைக்கப்பட்டது. அந்த யானை இயல்பு நிலைக்கு திரும்ப பயிற்சியும் அளிக்கப்பட்டது.
6 மாதங்களுக்கு பிறகு மரக்கூண்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அரிசிராஜா யானை, பாகன்களுக்கு கீழ்ப்படிய மறுத்தது. அத்துடன் அதன் பாதத்தில் ஏற்பட்ட புண்கள் காரணமாக அதற்கு சிகிச்சையும் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே அந்த யானை மீண்டும் மரக்கூண்டில் அடைக்கப்பட்டது.
தொடர்ந்து அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததுடன், பாகன்கள் பயிற்சி கொடுத்தனர். இந்த நிலையில் அதன் புண்கள் குணமானதுடன், பாகன்களுக்கு கீழ்ப்படிய தொடங்கியது. இதையடுத்து அரிசிராஜா யானை மரக்கூண்டில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டது.
கூண்டைவிட்டு வெளியே வந்ததும், அந்த யானை, பாகன்கள் கூறிய கட்டளைக்கு கீழ்ப்படிந்தது. தொடர்ந்து அந்த யானை அங்குள்ள வளர்ப்பு யானை முகாமில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் கூறியதாவது:-
பாகன்களுக்கு கீழ்ப்படிந்ததால் அரிசிராஜா யானை மரக்கூண்டில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளது. அதன் புண்களும் குணமாகிவிட்டன. யானைகள் வளர்ப்பு முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் அந்த யானைக்கு இன்னும் சில பயிற்சிகள் கொடுக்க வேண்டி உள்ளது.
எனவே பாகன்கள் பயிற்சி கொடுத்து வருகிறார்கள். மேலும் பாகன்கள் கொடுக்கும் பயிற்சியை இந்த யானை நன்றாக செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.