பந்தலூர்-சுல்தான்பத்தேரி சாலையில் வாகனங்களை மறித்த காட்டு யானைகள்

பந்தலூர்-சுல்தான்பத்தேரி சாலையில் வாகனங்களை காட்டு யானைகள் மறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-03-03 18:07 GMT
பந்தலூர்,

பந்தலூர் அருகே உள்ள நாயக்கன்சோலை, காப்பிக்காடு, கோரஞ்சால், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அந்த பகுதியில் வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர்.

இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து வாழை, தென்னை உள்ளிட்டவைகளை மித்தும், தின்றும் நாசப்படுத்தி வருகின்றன. மேலும் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளை இடித்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்னர்.

நேற்று முன்தினம் இரவு காப்பிக்காடு பகுதிக்குள் 3 காட்டு யானைகள் புகுந்தது. சிறிது நேரம் அங்கு முகாமிட்ட காட்டு யானைகள் திடீரென பந்தலூரில் இருந்து சுல்தான்பத்தேரி சாலைக்கு வந்தன.

தொடர்ந்து அந்த வழியாக சென்ற வாகன ங்களை மறித்தன. இதனால் அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர். மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து வனவர் சசிக்குமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சத்தம் எழுப்பி காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். அதன்பின்னர் போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

இதேபோல் திருவள்ளுவர்நகர், கோரஞ்சால் பகுதிகளையொட்டி உள்ள வனப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகும் அபாயம் உள்ளதால் வனத்துறையினர் காட்டு யானைகளை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்