தாறுமாறாக ஓடிய டிராக்டர் பேக்கரிக்குள் புகுந்தது

தொண்டி அருகே தாறுமாறாக ஓடிய டிராக்டர் பேக்கரிக்குள் புகுந்தது. இதில் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-03-03 17:55 GMT
தொண்டி,மார்ச்
தொண்டி அருகே தாறுமாறாக ஓடிய டிராக்டர் பேக்கரிக்குள் புகுந்தது. இதில் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
பதிவு எண் இல்லை
தொண்டி அருகே உள்ள பெருமானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 24). இவர் நேற்று தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் பதிவு எண் இல்லாத டிராக்டரை ஓட்டி சென்றார். தொண்டி பாவோடி மைதானம் அருகே சென்றபோது டிராக்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி இரு சக்கர வாகனங்களை மோதி தள்ளிவிட்டு சாலை ஓரம் உள்ள பேக்கரிக்குள் புகுந்தது.
 இதில் பேக்கரி அருகில் உள்ள கடை முன்பு ஜூஸ் குடித்து கொண்டிருந்த சோழியக்குடி லாஞ்சியடி பகுதியைச் சேர்ந்த மச்சகாந்தி (50), அவரது மருமகள் சாந்தி (28) ஆகிய இருவர் மீதும் மோதியது. இதில் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். 
உயிர் தப்பிய குழந்தை
இந்த விபத்தில் சாந்தி கையில் வைத்து இருந்த 6 மாத குழந்தை தூக்கி வீசப்பட்டது. ஆனால் காயம் ஏதும் இன்றி அந்தக் குழந்தை அதிர்ஷ்டவசமாக தப்பியது. படுகாயம் அடைந்த மச்சகாந்தி, சாந்தி இருவரும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து டிராக்டரை பறிமுதல் செய்ததுடன் டிராக்டரை ஓட்டிச்சென்ற டிரைவர் சதீஷ்குமாரை கைது செய்தனர்.
டிராக்டர் டிரைவர் குடிபோதையில் இருந்தது விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த டிராக்டர் விபத்து காட்சி பதிவாகி இருந்தது. இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்