பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை-விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு

பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2021-03-03 17:04 GMT
விழுப்புரம்:

மரக்காணத்தை அடுத்த புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 22 வயதுடைய பெண். அப்பகுதியில் ஆடு மேய்க்கும்போது அவருக்கும் எம்.திருக்கனூரை சேர்ந்த செல்வராஜ் மகனான கூலித்தொழிலாளி ராஜீவ்காந்தி (24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணுடன் ராஜீவ்காந்தி உல்லாசம் அனுபவித்தார். இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். உடனே அவர், ராஜீவ்காந்தியிடம் சென்று தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி கேட்டுள்ளார். அதற்கு அவர் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இந்த சம்பவம் கடந்த 2012-ம் ஆண்டில் நடந்தது.

தொழிலாளிக்கு சிறை

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜீவ்காந்தியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனிடையே அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகும் ராஜீவ்காந்தி, அப்பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட ராஜீவ்காந்திக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும், இந்த அபராத தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராஜீவ்காந்தி, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராதிகா செந்தில் ஆஜரானார்.

மேலும் செய்திகள்